தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் குமி இண்டஸ்ட்ரீஸ் ஆலை தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

5 Jun 2026, 1:31 am
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் குமி இண்டஸ்ட்ரீஸ் ஆலை  தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

ராஜஸ்தான் குமி இண்டஸ்ட்ரீஸ் ஆலை தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம் 49

பிவாடி, ஜூன் 4 - உத்தரப் பிரதேசத்தின் நொய்டா மதர்சன் (Motherson) ஆலையில் தொடங்கிய தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் தீப்பொறி, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதியான அல்வார் மாவட்டத்தின் குஷ்கேரா (Khushkhera) தொழிற் பேட்டைக்கும் பரவி, பெரும் வர்க்கக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிவாடிக்கு அருகிலுள்ள இத் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘குமி இந்தியா இண்டஸ்ட்ரீஸ்’ (Kumi India Industries) நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல் மற்றும் ஊதியக் குறைவுக்கு எதிராகத் தங்களின் உற்பத்தியை முற்றிலும் முடக்கி, ஆலை வாயிலில் அதிரடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜப்பானின் ‘குமி காசி’ மற்றும் இந்தியா வின் முன்னணி பிளாஸ்டிக் நிறுவனமான ‘சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ்’ ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான இவ்வாலை, வடஇந்தியா முழுவதும் உள்ள முன்னணி பயணிகள் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான உட்புற மற்றும் வெளிப்புற பிளாஸ்டிக் உதிரிபாகங்களை வழங்கி வருகிறது. இவ்வாலையில் பணிபுரியும் சுமார் 500 தொழிலாளர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர் எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களே ஆட்டோமொபைல் போக்குவரத்து மற்றும் உதிரிபாக விநியோகத்தை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைத்து ஆலை வாயிலை முற்றுகையிட்டுள்ளனர்.

எல்லையைக் கடந்த வர்க்கக் கொந்தளிப்பும் நியாயமான கோரிக்கைகளும்

அண்டை மாநிலமான ஹரியானாவில் அண்மையில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 35 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அரசு ஊதிய உயர்வு வழங்க மறுத்ததே இப்பிராந்தியத்தில் போராட்டம் வெடிக்க முதன்மைக் காரணமாக அமைந்தது. தொழிற்சங்கப் பாதுகாப்பு இல்லாத சூழலிலும், தொழிலாளர்கள் தங்களுக்குள் ஐந்து பேர் கொண்ட தற்காலிகக் குழுவைத் தேர்ந்தெடுத்து, அண்டை ஆலைகளின் ஆதரவோடு தங்களின் 5 அம்சக் கோரிக்கை சாசனத்தை முன்வைத்தனர்:

• 8 மணி நேர வேலைக்கு ₹20,000 அடிப்படை ஊதியம் வழங்குதல்.

• முறையான கூடுதல் நேர (Overtime) ஊதியக் கணக்கீடு.

• தன்னிச்சையான ஊதிய பிடித்தம் மற்றும் மேற்பார்வை யாளர்களின் அத்துமீறல்களை ஒழித்தல்.

• பிஎப் மற்றும் இஎஸ்ஐ சமூகப் பாதுகாப்புப் பலன்களை வெளிப்படையாக வழங்குதல்.

தொழிலாளர்களின் குமுறல்களும் வாழ்வாதார நெருக்கடியும்

ஆலை வாயிலில் திரண்ட தொழிலாளர்களின் நிலை குறித்து என்டிடிவி (NDTV) ராஜஸ்தான் ஊடகத்தின் கள அறிக்கையில் தொழிலாளர்கள் தங்களின் ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டனர். “எங்களைச் சுற்றி விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது. எரிபொருள் விலை உயர்வு, வீட்டு வாடகை, சமையல் எரிவாயு விலை உயர்வு என அனைத்தும் எங்களின் முதுகை உடைக்கின்றன. இந்தச் சூழலில், மாதத்திற்கு வெறும் 7,000 முதல் 8,000 ரூபாய் வாங்கிக்கொண்டு எங்களால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? எல்லையைக் கடந்தால் உள்ள மானேசர் (ஹரியானா) தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டுள்ள போது, ராஜஸ்தான் எல்லையில் உழைக்கும் எங்களின் உழைப்பு மட்டும் மலிவானதா?” என்று ஆண் தொழிலாளி ஒருவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு பெண் தொழிலாளி பேசுகையில், “இது வெறும் பணத்திற்கான போராட்டம் மட்டுமல்ல, ஆலைக்குள் எங்களின் கண்ணியத்தைக் காப்பதற்கான போராட்டம். ஒரு நாள் உடல்நலக் குறைவால் விடுப்பு எடுத்தால் கூட எங்களின் கேட் பாஸை பறித்துக் கொள்கிறார்கள். அசாத்திய உற்பத்தி இலக்குகளைக் காட்டி மேற்பார்வையாளர்கள் எங்களை மனிதர்களாக நடத்தாமல், தினமும் வேலைநீக்க மிரட்டல் விடுக்கிறார்கள்” என்று குமுறினார்.

இருநாட்கள் நீடித்த முற்றுகையும் வென்றெடுக்கப்பட்ட உடன்பாடும்

ஏப்ரல் 16 அன்று தொடங்கிய இந்த மாபெரும் வாயில் முற்றுகைப் போராட்டம், ஏப்ரல் 17 அன்றும் தொடர்ந்து நீடித்தது. ஒட்டுமொத்த பிவாடி-குஷ்கேரா தொழில் வழித்தடமே தொழிலாளர்களின் சாலை மறியலால் ஸ்தம்பித்ததால், மாவட்ட நிர்வாகம் பெரும் காவல் படையைக் குவித்தது. ஆயினும், தொழிலாளர்கள் பின்வாங்காததால் நள்ளிரவு வரை நீடித்த முத்தரப்பு அவசரப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள் வருமாறு: ஊதிய உயர்வு: அடிப்படை ஊதியத்தில் உடனடியாக ₹3,370 உயர்த்தப்படுவதோடு, கூடுதல் நேர வேலைக்கான (OT) ஊதியம் மணி ஒன்றுக்கு ₹61 லிருந்து ₹75 ஆக உயர்த்தப்படும். கண்ணியமான பணிச்சூழல்: தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் மேற்பார்வையாளர்கள் மீது உடனடி உள்விசாரணை நடத்தப்படும் என்றும், பணி இடத்தில் அத்துமீறல்கள் நடந்தால் தொழிலாளர்கள் காவல் துறையில் புகார் அளிக்க முழு உரிமை உண்டு என்றும் ஆலை மனிதவள மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இந்த வர்க்க ஒருமைப்பாட்டின் விளைவாக, ஏப்ரல் 17 நள்ளிரவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, ஏப்ரல் 18 சனிக்கிழமை காலை முதல் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்டிப் பணிக்குத் திரும்பினர். தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.