அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது! 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
3 Jun 2026, 9:02 pm

அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது! 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜூன் 3 - 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.எஸ். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து திமுக வேட்பாளர் மு. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அஞ்சல் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என்றும் பல அஞ்சல் வாக்குகள் தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டன என்றும் அவர் வாதிட்டார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

அதன்படி 2019-இல் வாக்குகள் எண்ணப் பட்டாலும் உச்சநீதிமன்றத் தடை காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் களம் இறங்கிய மு. அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையை தோற்கடித்தார். மேலும் சட்டப்பேரவை தலைவராகவும் ஐந்தாண்டு காலம் பணியாற்றி முடித்தார்.

இந்நிலையில் தான், 2016 தேர்தலையொட்டி மு. அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமையன்று இறுதித் தீர்ப்பு வழங்கினார்.

அதில், மறுவாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக வேட்பாளர் மு. அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

மேலும், இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம், அந்த 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் அவர் கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.