உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டிற்கு எதிராகத் தனிநபர் மசோதா கொண்டு வரப்படும் சென்னை கருத்தரங்கில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. உறுதி!
25 Feb 2026, 3:22 pm
<p><strong>உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டிற்கு எதிராகத் தனிநபர் மசோதா கொண்டு வரப்படும் சென்னை கருத்தரங்கில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. உறுதி!</strong></p>
<p>சென்னை, பிப். 25- “மத்தியப் பல்கலைக் கழ கங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங் களில் நிலவும் சாதிய மற்றும் மத ரீதியான பாகுபாடுகளைத் தடுக்க, நாடாளுமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனிநபர் மசோதா கொண்டு வரப்படும்” என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட ‘சமத்துவ விதிகள்-2026’க்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரியும், ‘ரோகித் வெமுலா சட்டத்தை’ இயற்ற வலியுறுத்தியும் சென்னையில் செவ்வாயன்று (பிப். 24) கண்டனக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தன. திட்டமிட்டப் புறக்கணிப்பும் உயிரிழப்புகளும் கருத்தரங்கில் உரையாற்றிய ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., மத்தியப் பல்கலைக்கழகங்களின் அவல நிலையைத் தரவுகளுடன் விளக்கினார்: “2018 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 14,446 மாணவர்கள் உயர்கல்வியிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர். 2017-23 ஆண்டுகளில் 7 மாணவர்கள் பாகுபாடு தாளாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒரு எஸ்சி, ஒரு எஸ்டி (SC/ST) துணைவேந்தர் மட்டுமே இருக்கும் நிலை இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைக் காட்டு கிறது. இதற்கு எதிராக சிபிஎம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கும்”என்றார். பின்னோக்கி இழுக்கும் சங்பரிவார் சக்திகள் தொடக்கவுரையாற்றிய தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் அகில இந்தியத் துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், “யுஜிசி விதிகள் மாணவர்களைப் பிளவுபடுத்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது ஏற்புடையதல்ல. சென்னை ஐஐடி மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் சாதி ரீதியாகக் கயிறு கட்டும் அவலத்தைச் சரி செய்ய வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார். கருத்தரங்கை வாழ்த்திப் பேசிய கிரிராஜன் எம்.பி., பாஜக அரசு உயர்சாதியினரின் விருப்பங்களைச் சட்டமாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். தமுஎகச துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், “உயர்கல்வி நிலையங்களில் 28 வகையான தீண்டாமை வடிவங்கள் உள்ளன. சங்பரிவார அமைப்புகள் கல்வி வளாகங்களுக்குள் ஊடுருவி மாணவர்களைக் காவி மயப்படுத்துவதை முறியடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். சமத்துவத்திற்கான தொடர் முழக்கம் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் பேசுகையில், பாடத்திட்டங்களில் மநுவாதக் கருத்துக்களைப் புகுத்தும் ஆட்சியாளர்களின் போக்கைக் கண்டித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க யுஜிசி வழிகாட்டுதல்கள் ஒரு ஆயுதமாக உதவும் என்றார். மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி.மிருதுளா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் கி.அன்பரசன், தீஒமு மாவட்டச் செயலாளர்கள் ச.ஆனந்தகுமார், வ.அசோக்சிங், மாநிலச் செயலாளர் ச.லெனின் உள்ளிட்டப் பல முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். உயர்கல்வி நிலையங்களில் சமத்துவத்தை நிலைநாட்டவும், பாகுபாடற்ற கல்விச் சூழலை உருவாக்கவும் ஒன்றிணைந்து போராட இக்கருத்தரங்கம் அறைகூவல் விடுத்தது. (ந.நி.)</p>
