விளையாட்டு
13 May 2026, 9:47 pm

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 38ஆவது சீசன் பாங்காக்கில் உள்ள நிமிபுத்தர் மைதானத்தில் மே 12ஆம் தேதி தொடங்கியது. 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (4 கோடியே 78 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகை கொண்ட தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் இல்லாத சீன தைபேவின் டோங்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே நிதான அதிரடியை வெளிப் படுத்திய பி.வி.சிந்து 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு முன்னேறி னார். வியாழனன்று நடைபெறும் 2ஆவது சுற்றில் டென்மார்க்கின் அமேலியை இந்தியா வின் பி.வி.சிந்து எதிர்கொள்கிறார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்பக் கோரிய மனு ஒன்றிய அரசு பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து அமெரிக்கா - கனடா - மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக ஜூன் மாதம் நடைபெறுகிறது. போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நள்ளிரவில் போட்டி நடைபெறுவதை காரணம் காட்டி இந்தியாவில் எந்த ஒரு ஒளிபரப்பு நிறுவனமும் உரிமம் பெறவில்லை. இதனால் இந்தியாவில் கால்பந்து போட்டியை காண முடியாத சூழல் உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் அவ்தேஷ் பைர்வா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்பக் கோரி தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான இடைக்கால நிவாரணமாகத் தொடக்க ஆட்டம், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை பிரசார் பாரதிக்கு (தூர்தர்சன்) ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் ; அல்லது உலகக்கோப்பையின் அனைத்து 104 போட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை பிரசார் பாரதி பெற வேண்டும்; இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - மும்பை இடம் : தர்மசாலா, இமாச்சலப்பிரதேசம் / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)