புதிர் விளையாட்டு - மஞ்சு
18 Jul 2026, 10:09 pm

புதிர் விளையாட்டு - மஞ்சு

சிட்டுக்குருவிகளே, இந்த முறை உங்களின் ஊகத் திறமைக்கு ஒரு போட்டி. கதையை நன்றாகக் கவனித்துப் படியுங்கள்.

கட்டாய விதியை நண்பர்கள் நிறைவேற்றியது எப்படி?

அந்த ஊருக்கு வெளியே அழகான காடு ஒன்று இருக்கிறது. ஊரில் நம் ஓவியாவும் இனியனும் நல்ல நண்பர்களாக நெருங்கிப் பழகுகிறார்கள். ஒருநாள் ஓவியா மனதில் ஒரு யோசனை உதித்தது. உடனே அதை அவள் இனியனிடம் சொன்னாள். “டேய், நாம எப்பவுமே அந்தக் காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் போயிட்டுத் திரும்பிடுறோம். ஆனா காட்டைத் தாண்டிப் போனா அந்தப் பக்கம் இருக்கிற ஊருல கதைப் புத்தகம் பரிசாத் தர்றாங்களாம். நாம ஏன் இந்தத் தடவை காட்டை முழுசாக் கடந்து அந்தப் பக்கம் போகக்கூடாது,” என்று கேட்டாள். “அருமையான ஐடியா! நமக்குக் காட்டைத் தாண்டிப் போறது ஜாலியாவும் இருக்கும். கதைப் புத்தகமும் கிடைக்குமே. போலாம். என்னோட பெரிய சைக்கிள்ல டபுள்ஸ் போலாம்,” என்று இனியன் சொன்னான். இருவரும் தங்கள் பெற்றோரிடம் இந்தத் திட்டத்தைச் சொன்னார்கள். பிள்ளைகளின் இப்படிப்பட்ட புதிய முயற்சிகளுக்குத் தடை போடாதவர்களான பெற்றோர்கள் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் “ஒரு நிபந்தனை இருக்குது. அதை நீங்க நிறைவேத்தணும்,” என்று சொன்னார்கள். அதாவது, இருவரும் அந்த சைக்கிளில் மெதுவாகத்தான் செல்ல வேண்டும். வேகமாக ஓட்டக்கூடாது. சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியிலிருந்து அது எவ்வளவு வேகமாகப் போகிறது என்பது இங்கே தெரிந்துவிடும். இந்த விதிக்கு ஓவியாவும் இனியனும் ஒப்புக்கொண்டார்கள். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஓட்டிச் சென்றார்கள். விரைவில் காட்டைக் கடந்து அடுத்த ஊரை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் விதியை மீற விரும்பவில்லை. காட்டுக்குள் பாதித் தொலைவு சென்றிருப்பார்கள். ஒரு மரத்தடியில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அருகில் சென்று அவருடன் பேசினார்கள். “என்னுடைய சைக்கிளில் காட்டைச் சுற்றிப் பார்க்க வந்தேன். கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என்று உட்கார்ந்தேன்,” என்று அவர் தெரிவித்தார். ஓவியா அவரிடம் தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தையும் பெற்றோரின் விதியையும் சொன்னாள். பெரியவர் தனது ஆலோசனையைக் கூறினார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு இருவரும் மறுபடி புறப்பட்டார்கள். ஆனால் சைக்கிளை வேகமாகவே ஓட்டினார்கள். விரைவில் அடுத்த ஊரை அடைந்து புத்தகங்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு திரும்பினார்கள். பெற்றோரின் பாராட்டும் அவர்களுக்குக் கிடைத்தது. விதியை மீறி வேகமாகச் சென்றாலும் பெற்றோரின் பாராட்டைப் பெற்றது எப்படி?

விடை

பெற்றோர் விதித்த விதியின்படி, இனியனின் சைக்கிளைத்தான் வேகமாக ஓட்டக்கூடாது. ஆகவே,பெரியவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்வரலாம் என்று ஆலோசனை கூறினார். அப்படியே இருவரும் செய்தார்கள். இனியனின் சைக்கிள் அங்கேயே நின்றதாலும்,பெரியவர் தனக்குத் தேவைப்பட்டபோது மெதுவாக ஓட்டிச்சென்று திரும்பியதாலும் அதில் இருந்த கருவியிலிருந்து குறைந்த வேகமே பதிவாகியிருந்தது. இந்த விடையை சரியாக ஊகித்த அறிவுப் பிஞ்சுகள் அனைவருக்கும் ‘பாலர் பூங்கா’ வாழ்த்துகள். முயற்சி செய்த பூக்களுக்குப் பாராட்டுகள்.