மனித உறவுகளைப் போற்றிய மாமனிதரின் போராட்ட வரலாறு! - எம்.ஜே.பிரபாகர்
1 hour before
<p><strong>மனித உறவுகளைப் போற்றிய மாமனிதரின் போராட்ட வரலாறு! - எம்.ஜே.பிரபாகர்</strong></p><p><strong> </strong>“வரலாறு என்பது வெற்றியாளர்களின் கதை மட்டுமல்ல, மாற்றத்திற்காகப் போராடியவர்களின் குருதி படிந்த சுவடு” என்பதற்கு ஒரு சிறந்த சான்றாக வெளிவந்துள்ளது எழுத்தாளர் மருதுபாரதி எழுதிய ‘புரட்சி வாழ்த்துக்கள் - மு.சி. கருப்பையா பாரதி’ என்னும் நூல். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் சமரசமின்றிப் போராடிய தோழர் மு.சி. கருப்பையா பாரதியின் வாழ்க்கை மற்றும் சமூகப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் மிக முக்கியமான படைப்பாக இது திகழ்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டியில், வசதி வாய்ப்புகள் மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதியக் கட்டுமானங்களைத் தகர்த்து எளிய விளிம்புநிலை மக்களின் மனித உறவுகளைப் போற்றிக் கொண்டாடியவர் கருப்பையா பாரதி. மகாகவி பாரதியாரின் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் தன் பெயரோடு ‘பாரதி’ என்பதை இணைத்துக் கொண்டவர். எப்போதும் சட்டை அணியாமல், தோளில் ஒரு துண்டு, உடுக்க ஒரு வேஷ்டி, கையில் ஒரு குடையுடன் எளிய பொதுவுடைமைவாதியாக இந்தியா முழுக்கப் பயணித்தவர். அறிமுகம் உள்ளவர், இல்லாதவர் என யாரிடம் பேசினாலும், விடைபெறும்போது ஒரு கம்பீரமான சிரிப்போடு “புரட்சி வாழ்த்துக்கள்!” என்ற சொல்லை உதிர்ப்பதே இவரது தனித்துவ அடையாளம். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவோடு சிகிச்சை பெற்று வந்த இறுதி நாட்களிலும், தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் அவர். மருதுபாரதி இந்நூலை வெறும் புகழுரையாக மட்டும் எழுதாமல், அந்த காலகட்டத்தின் சமூகச் சூழலைத் துல்லியமாகப் படம்பிடித்துள்ளார். அடித்தட்டு மக்களுக்காக உழைத்து, வரலாற்றுப் பக்கங்களில் உரிய அங்கீகாரம் பெறாமல் மறைக்கப்பட்ட மு.சி. கருப்பையா பாரதி போன்ற ஆளுமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஆசிரியரின் வேட்கை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிகிறது. சமூக மாற்றத்தை விரும்புவோரும், பொதுவுடைமைச் சிந்தனையாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய உன்னதமான சமூக ஆவணம் இந்நூல். புரட்சி வாழ்த்துக்கள் - மு.சி. கருப்பையா பாரதி ஆசிரியர்: எழுத்தாளர் மருதுபாரதி வெளியீடு: காலம் வெளியீடு, மதுரை. விலை: ₹160/- தொடர்புக்கு: 9443078339</p>
