தவறவிட்ட நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு
29 May 2026, 12:00 am
<p><strong>தவறவிட்ட நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு</strong></p><p>புதுக்கோட்டை, மே 28- புதுக்கோட்டை நகரில் ஒரு பெண் தவறுதலாக, வேறு இருசக்கர வாகனத்தில் 10 பவுன் தங்க நகையுள்ள பையை மாட்டிவிட்டுப் போன நிலையில், அதனை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியை காவல்துறையினர் பாராட்டினர். புதுக்கோட்டை பாலன்நகரைச் சேர்ந்த தம்பதி கார்த்தி-தேவகி ஆகியோர் புதன்கிழமை கீழராஜவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது ஓரிடத்தில் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றுமீண்டும் வாகனத்தை எடுத்துள்ளனர். அப்போது தங்களது வாகனத்தில் ஒரு பை மாட்டப்பட்டிருப்பதை பார்த்தனர். அதில் சுமார் 10 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து, அவர்கள் இருவரும் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் வந்து, உதவி ஆய்வாளர் பூர்விகாவிடம் அவற்றை ஒப்படைத்தனர். யாரேனும் நகையைத் தேடி வருகிறார்களா எனக் காத்திருந்த காவல்துறையினர், கீழராஜவீதி பகுதிக்கே சென்று விசாரித்தனர். அப்போது அங்கு சிலர் நகைப் பையைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கேட்டு, அந்த நகையின் உரிமையாளரான தொண்டைமான் நகரைச் சேர்ந்தவர் நித்லா காந்தியை தொலைபேசியில் பேசி வரவழைத்து உறுதி செய்து அவற்றை ஒப்படைத்தனர். தவறுதலாக விட்டுவிட்டுச் சென்ற நகையை நல்லெண்ணத்தில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கார்த்தி-தேவகி தம்பதியை காவல் உதவி ஆய்வாளர் பூர்விகா மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.</p>
