ஸ்மார்ட் மீட்டர் திட்டம் புதுச்சேரி மக்களுக்கு அபாய ஒலி! - எஸ். கண்ணன்
17 Jul 2026, 8:34 pm

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் புதுச்சேரி மக்களுக்கு அபாய ஒலி! - எஸ். கண்ணன்

‘இந்தியாவின் பிரான்ஸ்’ என்று அழைக்கப்படும் புதுச்சேரி, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தவரை சட்டம் இயற்றும் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களை யும் பெற்றுத் தனித்துவமிக்க மாநிலமாகத் திகழ்ந்தது. ஆனால், 1963-இல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு, பிற மாநிலங்களைப் போன்ற எந்தவித ஜனநாயக உரிமைகளும் அதற்கு வழங்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருந்தும், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றும் அரசாகவே புதுவை அரசு செயல்பட்டு வருகிறது. 2014-இல் பொறுப்பேற்ற ஒன்றிய பாஜக அரசு, புதுச்சேரியைத் தனது மக்கள் விரோதத் திட்டங்களுக்கான பரிசோதனைக் கூடமாக மாற்றத் துவங்கியது. 2021 முதல் ஆட்சிபுரியும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, புதிய தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020), மும்மொழிக் கொள்கை, பொது விநியோகத் திட்டச் சீர்குலைவு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக விபி ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம் போன்றவற்றை வரிசையாக நிறைவேற்றி வருகிறது. மேலும், பொது-தனியார் பங்களிப்பு (PPP) கொள்கையின்படி, அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் முழு வீச்சிலான தனியார்மய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதுச்சேரியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத் துறையை 100 சதவீதம் தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முயன்றபோது, ஊழி யர்கள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பால் 2026 ஜனவரியில் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தின் மூலம் மறைமுகமாகக் கொல்லைப்புற வழியாகத் தனியார்மயமாக்கும் இலக்கை அரசு நிறைவேற்றத் துடிக்கிறது. இதனால் ஏழை எளிய மக்களிடம் எஞ்சியுள்ள அடிப்படை உரிமைகளும் முற்றாகப் பறிபோகும் நிலை உள்ளது.

ஒன்றிய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ் (RDSS) திட்டம்

ஒன்றிய மின்சார அமைச்சகம் 2021 ஜூலையில் ‘புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை’ (RDSS) அறிமுகம் செய்தது. இதன் நோக்கம், மின் விநியோகக் கட்டமைப்பை நவீனப்படுத்தி, வருவாய் இழப்பைக் குறைத்து 2025-2026 ஆண்டுகளுக்குள் பூஜ்ஜிய மாக்குவது என்பதாகும். ஆனால் எங்கும் மின் விநியோகக் கட்டமைப்பை நவீனப்படுத்துவது என்பது இன்னும் நடைபெறவில்லை. புதுச்சேரியில் வணிக ரீதியான இழப்பு 14.57 சதவீதமாகவும், விநியோக இழப்பு 10.88 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது. இது தேசியச் சராசரியை விட மிகவும் குறைவுதான். ஆயினும், இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்தித்ததால், என்.ஆர். காங்கிரஸ் அரசு இதற்கு உடன்பட்டது. புதுச்சேரியின் 4.07 லட்சம் மின் இணைப்புகளுக்குப் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, ரூ.383.59 கோடி மதிப்பில் ‘அப்ரவா எனர்ஜி’ என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது வரை ஒரு லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. நுகர்வோரின் அனுமதி பெறாமல், நல்ல நிலையில் உள்ள சொந்த மீட்டர்களைத் தனியார் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மறுப்பவர்களிடம் ‘மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 163(3)’-இன் படி மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை மிரட்டுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள்

• மாதாந்திர வாடகை:

இலவசம் என்று கூறப்பட்டாலும், மீட்டர் பொருத்திய பிறகு வாடகை என்ற பெயரில் மாதம் ரூ.80 முதல் ரூ.250 வரை நுகர்வோரிடம் மாதாந்திரக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

• பிரீபெய்டு கட்டாயமாக்கல்: போஸ்ட்பெய்டு மீட்டர்கள் எந்நேரமும் பிரீபெய்டு (Prepaid) மீட்டர்களாக மாற்றப்படலாம். அதாவது, பயன்படுத்தப் போகும் மின்சாரத்திற்கு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்ய வேண்டும். பணம் தீர்ந்தால் மின்சாரம் தானாகத் துண்டிக்கப்படும். மறு இணைப்பிற்குப் புதிய அபராதத் தொகை செலுத்த நேரிடும்.

• மானியங்கள் ரத்து: இத்திட்டத்தால் 4 லட்சம் வீட்டு மின் இணைப்புகள், 65,000 வணிக நிறுவனங்கள் மற்றும் 531 தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மின்சாரம் முற்றிலும் ரத்தாகும்.

• உச்சநேரக் கட்டணம் : தற்போது பெருநிறுவனங்களுக்கு மட்டுமே உள்ள இந்த உச்சநேரக் கூடுதல் கட்டண முறை, ஸ்மார்ட் மீட்டர் வந்தபின் வீடுகளுக்கும் அமலாகும். காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும், இத்துறை தனியார் வசமாவதால் மின்துறையில் ரீடிங் எடுக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்; படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகும். ஒன்றிய பாஜக - புதுவை என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் இந்த வஞ்சகத் திட்டத்திற்கு எதிராக மின்துறை ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் என அனைத்து ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் ஒன்றுதிரண்டு கூட்டுப் போராட்டக் களத்தைக் காண வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியின் பாரம்பரியத்தையும், பறிக்கப்பட்ட மாநில உரிமைகளையும் மீட்டெடுக்க முடியும்.