கால்வாய், சாலை வசதி கோரி சிபிஎம் கையெழுத்து இயக்கம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>கால்வாய், சாலை வசதி கோரி சிபிஎம் கையெழுத்து இயக்கம்</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச.17- திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் முத்தம்மாள் நகரில் வசிக்கும் பொது மக்களுக்கு சாலை வசதி, கால்வாய், தெருவிளக்கு ஆகியவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ச.குமரன், கிளைச் செயலாளர் ஆனந்தன், உள்ளிட்டோர் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். திருவண்ணாமலை மாநகரத்துக்கு உட்பட்ட வேங்கிக்கால் புதூர் முத்தம்மாள் நகரில் தற்போது தார் சாலை புதிதாக போடப்பட்டுள்ளது. இதில் நகரின் கடைசி தெருவில் சுமார் 600 மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் தார்ச் சாலை அமைக்கும்போது கடைசி தெரு 600 மீட்டர் விடுபட்டு உள்ளது. இப்பகுதியில் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இத்தெருவில், சிபிஎம் மாவட்ட குழு அலுவலகம் அமைந்துள்ளது. தெருவில் அமைந்துள்ள ஐந்து மின் கம்பங்களில் தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளன, ஆனாலும் பராமரிப்பு இல்லாததால் சரிவர எரிவதில்லை. எனவே திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம் முத்தம்மாள் நகரில் சாலை வசதி கால்வாய் வசதி தெருவிளக்கு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்து மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கையெழுத்துட்டு மனுவினை அளித்தனர்.</p>
