மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
17 May 2026, 11:08 pm
<p><strong>மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை</strong></p><p>சேலம், மே 17- ஆத்தூர் அருகே அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொது மக்கள், அந்த கடையை முற்றுகையிட்டதால், தற்காலிகமாக கடை மூடப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு மது பானக்கடை (எண்: 7160) செயல்பட்டு வருகிறது. இக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஞாயிறன்று கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 12 மணி அளவில் கடை திறக்கப்பட்ட நிலையில், மது வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இருந்த போதும் பொதுமக்கள் அவர்களை மதுபாட்டில் வாங்க உள்ளே செல்ல அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடை மூடாமல் கலைய மாட்டோம் என மக்கள் தெரிவித்ததால், அதிகாரிகள் தற்காலிகமாக கடையை மூடினர். மேலும், முறையாக மனு அளித்தால் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p>
