இடுகாட்டுக்கு சாலை அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை
7 Dec 2025, 3:52 pm
<p><strong>இடுகாட்டுக்கு சாலை அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை</strong></p>
<p>பாபநாசம், டிச.7- அய்யம்பேட்டை அருகே நெடார் ஆலங்குடி கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, தோட்டக்காடு ஊராட்சியைச் சேர்ந்த நெடார் ஆலங்குடி கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்திலுள்ள இடுகாட்டிற்குச் செல்ல தரமான சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவையை நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, கிராம மக்கள் கூறும்போது, “எங்கள் கிராமத்திற்கான இடுகாடு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இடுகாட்டிற்கான சாலை போட்டு 35 ஆண்டுகளுக்கும் மேலானது. அதன்பிறகு சாலை பராமரிப்பின்றி, கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல, வாகனங்களில் செல்ல பயனற்ற நிலையில் உள்ளது. சாலையின் இரு புறமும் முள் செடிகள் மண்டியுள்ளன. இந்தச் சாலையில் மின் வசதியும் இல்லை. கிராமத்து இடுகாட்டிற்கு சுற்றுச் சுவர் சுவர் கட்டித் தருவதோடு, தண்ணீர் வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் இந்தச் சாலைக்கு செல்லும் பாலம் மிகவும் குறுகியதாக இருப்பதால், அமரர் ஊர்தி வாகனத்தால் செல்ல முடியாத நிலை உள்ளது. இறுதி காரியத்தை முடித்து, ஆற்றில் குளிப்பதற்காக இரண்டு படித்துறைகள் இருந்தன. அந்த படித்துறைகள் இடிந்து போய் பல ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை மீண்டும் கட்டித்தரவில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.</p>
