காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளத்தில் சடலத்தைத் தூக்கிச்சென்ற அவலம் பொதுமக்கள் வேதனை
9 Dec 2025, 4:25 pm
<p><strong>காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளத்தில் சடலத்தைத் தூக்கிச்சென்ற அவலம் பொதுமக்கள் வேதனை</strong></p>
<p>கடலூர், டிச.9- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அடுத்துள்ள நந்திமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி குமார் (54) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் திங்களன்று (டிச.8) நடை பெற்றது. அவர்கள் வசிக்கும் கம்பன் தெருவில் உள்ள இடுகாட்டுக்குச் செல்லும் பாதை முழுவதும் 3 அடிக்கு மேல் வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால், பொது மக்கள் இறந்தவரின் உடலை மிகவும் சிரமப்பட்டு வெள்ளநீரிலேயே தூக்கிச் சென்றனர். பொதுமக்கள் கோரிக்கை இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மழைக்காலங்களில் வீராணம் ஏரியிலிருந்து வெளி யேற்றப்படும் வெள்ளநீர், நந்திமங்கலம் கிராமத்தையொட்டி உள்ள வாய்க்கால் வழியாகச் செல்கிறது. அந்த வாய்க்காலின் கரைகள் பலப்படுத்தப்படாததால் வெள்ளநீர் கம்பன் தெருவில் அதிக அளவில் சூழ்ந்து விடுகிறது. இந்தக் கம்பன் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்லாண்டுகாலமாக வாய்க்கால் கரையைப் பலப்படுத்த வேண்டும் மற்றும் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இறந்த குமாரும் கூட இதற்காக அதிகாரி களிடம் மனு அளித்து பல போராட்டங் களை நடத்தி யுள்ளார். ஆனால், அவர் இறந்த பிறகும் அதே வெள்ள நீரில் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டதாகவும், இதுவரை வாய்க்கால் கரையைப் பலப்படுத்தவோ, சுடுகாட்டுக்கு புதிய பாதை அமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.</p>
<p> </p>
