திருச்சி முக்கிய செய்திகள்
11 Jan 2026, 7:00 am

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த நடமாடும் செயல் விளக்க வாகனம்

திருச்சிராப்பள்ளி, ஜன.11- இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி ஆகியவற்றின் முதல் நிலை சரிபார்ப்பு பணி, கடந்த ஆண்டு டிச.11 அன்று தொடங்கப்பட்டு, ஜன.10 வரை நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையங்கள் சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்படவுள்ளன. அனைத்து வாக்குச் சாவடி பகுதிகளை, தொகுதிகளைச் சென்றடையும் வகையில், விழிப்புணர்வு நோக்கத்திற்காக நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளிலிருந்து நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜன.27 தமிழகத்தின் அனைத்து வட்ட தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.11- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தஞ்சையில் மாவட்ட துணைத் தலைவர் இரா.தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. வருங்கால செயல்பாடுகள், மாநில செயற்குழு முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் இரா.பன்னீர்செல்வம் பேசினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.கோவிந்தராசு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டக்கிளை நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை வரவேற்கிறோம். அதில் உள்ள குறைகளை வருங்காலத்தில் சரி செய்ய வேண்டும். கமுட்டேசன் பிடித்தம் செய்த காலத்தை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். வலியுறுத்தி ஜனவரி 27 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து வட்ட தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 10 ஆம் தேதி மாவட்ட தலைமையிடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மூன்றாவது கட்டமாக கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவிலான கருத்தரங்கத்தை மார்ச் மாதம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

வங்கிக்கணக்கில் பணம் எடுக்கும் வசதி தூத்துக்குடி அஞ்சலகங்களில் அறிமுகம்

தூத்துக்குடி,ஜன.11- தூத்துக்குடி மாவட்டத்தில், அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் அட்டை கொண்டு, எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு : அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் போஸ்ட் பேமென்ட் வங்கி மூலமாக விபத்து காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மக்கள் இதில் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் வெறும் ரூ.700 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், அஞ்சலகங்களில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி விபத்து காப்பீட்டை பெறலாம். அஞ்சலகத்தை பொறுத்தளவில் ஒரே குடையின் கீழ் பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட் சேவை, பிசினஸ் போஸ்ட், ஆதார் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்கள் 30 அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆதார் அட்டை கொண்டு, எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்ளும் சேவையும் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தபால்காரரிடம் நேரடியாகவும் ஆதார் அட்டை கொண்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரத்துக்குறைவால் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி,ஜன.11- தூத்துக்குடியில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை உயர்ந்தது. தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்புக்குச் சென்ற நாட்டுப் படகுகள் நேற்று கரை திரும்பின. கடல் பகுதியில் வீசிவரும் பலத்தக் காற்று காரணமாக, மீன்கள் வரத்து குறைவாகக் காணப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால், மீன்களின் விலை உயர்ந்தது. சீலா மீன் கிலோ ரூ. 1,100 வரை, விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 500 - ரூ. 700, நண்டு கிலோ ரூ. 800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,000 - ரூ. 2,500, கேரை, சூரை ஆகியவை ரூ. 250 - ரூ. 300 என விற்பனையாகின. வரத்து குறைந்தபோதும் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடல், குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்-மீனவர் நலத் துறை சார்பில், விசைப்படகு, நாட்டுப் படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 270- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

திருநெல்வேலி,ஜன.11- நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் களக்காடு மலைப்பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர், களக்காடு (கூடுதல் பொறுப்பு) உத்தரவின்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்குட்பட்ட களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தும், பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று களக்காடு வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாசு இல்லா போகி கொண்டாடுவோம்! ஆட்சியர் அறிவுறுத்தல்

அரியலூர், ஜன.11- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையின்போது, தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பது வழக்கம். ஆனால், பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவற்றை எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர். இத்தகைய செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகள் மற்றும் நச்சுத்துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. மேலும், கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுத்துகின்றன. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. பார்க்கும் திறன் குறைபடுகிறது. எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.