தூய்மைப் பணியில் தனியார்மயம்: ஒழிக்கப்பட வேண்டிய நவீன சுரண்டல்! - ம.பாலசுப்பிரமணியன்
20 Jul 2026, 8:49 pm

தூய்மைப் பணியில் தனியார்மயம்: ஒழிக்கப்பட வேண்டிய நவீன சுரண்டல்! - ம.பாலசுப்பிரமணியன்

தமிழகத்தில் தூய்மைப் பணியினை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) மேற் கொள்வதற்காகக் கோரப்பட்டிருந்த ஒப்பந்த அறிவிப்பினைத் தமிழக அரசு ரத்து செய்திருப்பது, மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட ஒரு வரவேற்கத் தக்க நடவடிக்கையாகும். ஆனால், தூய்மைப் பணி யில் தனியார்மயத்தை அரசு முற்றிலுமாக கைவிட்டு விட்டதா என்ற கேள்விக்கு முழுமையான விடை தேவைப்படுகிறது.

தனியார்மயத்தின் ‘பரிணாம’ வளர்ச்சி

கடந்த 20 ஆண்டுகளாகத் தூய்மைப் பணியில் தனி யார்மயத்தை உட்புகுத்தும் முயற்சிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 2006-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் தொடங்கிய இந்த விதை, அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையாகப் பரவியது. 2021-க்குப் பிறகு, தூய்மைப் பணியைத் தனியார்மயமாக்க அரசாணை 152 மற்றும் 139 வெளியிடப்பட்டு, அது ஒரு கொள்கை முடிவாகவே மாற்றப்பட்டது.

ஒப்பந்த முறைக்கும் தனியார்மயத்திற்கும் உள்ள மிக முக்கிய வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒப்பந்த முறையில் ஒரு நிறுவனம் தொழிலா ளர்களை மட்டும் சப்ளை செய்து சேவைத்தொகை யைப் பெற்றுக் கொள்ளும். ஆனால், தனியார்மயத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் என்பது ‘இயக்கு தல் மற்றும் பராமரித்தல்’ (Operation and Mainten ance) என்ற அடிப்படையில் அமைகிறது. இதில், வாக னங்கள், எரிபொருள், தொழில்நுட்பம், மேலாண்மை என அனைத்தையும் தனியார் நிறுவனங்களே கவ னித்துக் கொள்கின்றன. இது தொழிலாளர்களைச் சுரண்டுவது மட்டுமன்றி, உள்ளாட்சி நிர்வாகத்தின் சொத்துக்களையும், அதிகாரத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஒரு ஆபத்தான செயல்முறை ஆகும்.

அந்நியமாகும் தொழிலாளர்கள் : கண்ணியத்திற்கு விடுக்கப்பட்ட சவால்

தனியார்மயத்தின் மிக மோசமான விளைவு ‘அந்நியமாதல்’ ஆகும். ஒப்பந்த முறையில் தொழிலா ளிக்கும், உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பு இருந்தது. ஆனால், தனியார்மயத் தில் அந்த உறவு முற்றிலுமாக அறுக்கப்படுகிறது. தொழிலாளி தன் பணியை அந்த ஊரின் ஒரு கடமை யாகப் பார்க்காமல், ஒரு அந்நிய கார்ப்பரேட் நிறு வனத்தின் இயந்திரமாக மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இதனால் பணியின் மீது பற்றோ, பொறுப்போ இருக்க வாய்ப்பு இல்லை. தொழி லாளிக்கும், முதலாளிக்கும் இடையிலான நேரடி உறவு மறைந்து, ஒரு இயந்திரத்தனமான -அடிமைமுறை உருவாக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களை வெறும் ‘குப்பை அள்ளும் கருவிகளாக’ மட்டுமே பார்க்கும் இந்தக் கார்ப்பரேட் அணுகுமுறை, தொழிலா ளர்களின் சுயமரியாதையையும், சமூகக் கண்ணி யத்தையும் திட்டமிட்டுச் சிதைக்கிறது. நிர்வாகமும் தொழிலாளியும் பிணைந்திருந்த அந்தச் சமூகக் கண்ணி அறுக்கப்படுவதால்தான், தூய்மைப் பணி யின் தரம் வீழ்ச்சியடைகிறது.

அரசாணை 152: நிர்வாகக் கட்டமைப்பின் சிதைவு

அரசாணை 152 என்பது தூய்மைப் பணியை மட்டும் தனியார்மயமாக்கும் ஆவணம் அல்ல; இது மாநகராட்சியின் ஒட்டுமொத்த அலுவல் கட்டமைப்பை யே சிதைக்கும் கருவியாகும். “நிரந்தரப் பணியிடங்கள் காலியாகும் பட்சத்தில், அவற்றை மீண்டும் நிரப்பக் கூடாது, அப்பணிகளை வெளிமுகமை மூலம் மேற்கொள்ள வேண்டும்” என்ற அதன் பிரிவு 5(V), உள்ளாட்சி நிர்வாகத்தை மெல்ல மெல்ல தனியார் நிறுவனங்களின் காலடியில் கொண்டு சேர்க்கிறது.

இதன் மற்றொரு மோசமான அம்சம், உள்ளாட்சி நிர்வாகத்தின் ஜனநாயகச் செயல்பாட்டைப் பறிப்ப தாகும். ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது, அந்தத் தனியார் நிறுவனம் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதி காரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு இருப்பதில்லை. மாநிலத் தலைமையகமே அதைத் தீர்மானிக்கிறது. இதனால், மாமன்றமோ அல்லது மாநகராட்சி ஆணை யரோ சம்பந்தப்பட்ட நிறுவனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சட்டப்படியான கடமைகளைக் கூட நிறை வேற்ற முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்படு கின்றனர்.

மதுரையின் அனுபவம்: முறைகேடுகளின் கோட்டை

மதுரை மாநகராட்சியில் ‘அவர்லேண்ட்’ நிறுவனம் மேற்கொள்ளும் பணிகளே தனியார்மயத்தின் லட்ச ணத்திற்குச் சான்று. ஒப்பந்தப்படி தினமும் 916 மெட்ரிக் டன் குப்பையை அகற்ற வேண்டிய நிறுவ னம், உண்மையான பணியாளர் எண்ணிக்கையை விட மிகக் குறைந்த அளவே பணியமர்த்தியுள்ளது.

மேலும், குப்பையின் எடை அளவிலும் பெரும் மோசடி நடக்கிறது. குப்பைக்குப் பதிலாகக் கற்களை யும் மண்ணையும் அள்ளி எடை காட்டி, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.34 கோடிக் கும் மேல் முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாநகராட்சியின் நிலை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடக்கும் முறை கேடுகளின் ஒரு சிறு பகுதி மட்டுமே. தனியார் நிறுவனங் கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இலக்கு களை எட்டும் கடமை உணர்வற்றவையாக உள்ளன. இது நகரத்தின் சுகாதாரத்தைப் பாழாக்குவது மட்டு மன்றி, அரசின் நிதி ஆதாரத்தைச் சூறையாடும் செயலாகும்.

நிதிச் சிக்கனமா? அல்லது ஊழல் பெருக்கமா?

தனியார்மயம் நிதிச் சிக்கனத்தை உருவாக்குவ தாக அரசு ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் உண்மையை ஆராய்ந்தால், நிரந்தரப் பணி யாளர்களை நியமிக்க ஆகும் செலவை விட, தனி யார் ஒப்பந்தத்திற்குச் செலவிடப்படும் தொகை, மறைமுக ஊழல்கள், வரி இழப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட்டால், இது எக்காலத்திலும் லாபகரமானது அல்ல.

கடந்த காலங்களில் மதுரை மாநகராட்சி வரி வருவாயில் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டதை மாநக ராட்சி ஆணையர் அறிக்கையே உறுதிப்படுத்தி யுள்ளது. இது தனியார்மயம் ஏற்படுத்திய கண்கா ணிப்புச் சுழற்சியின் தோல்வியாகும். வாகனங்கள், தளவாடச் சாமான்கள், கிருமிநாசினி கொள்முதலில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் வெளிச் சத்திற்கு வரும். தனியார்மயம் என்பது உள்ளாட்சி நிர்வாகத்தில் ஏற்கெனவே ஊடுருவியுள்ள ஊழலைக் கரைபுரண்டோடச் செய்துள்ளதே தவிர, நிதிச் சிக்க னத்தை உருவாக்கவில்லை.

சமூக நீதியும் தொழிலாளர் வாழ்வாதாரமும்

தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்வ தால் ஒரு குறிப்பிட்ட சமூகம் இப்பணியிலேயே கெட்டிப் பட்டுவிடும் என்ற வாதம், சமூக நீதியின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாகும். கள அனுபவம் முற்றிலும் வேறானது. நிரந்தரப் பணியா ளர்களின் அடுத்த தலைமுறை, வருமானப் பாது காப்பின் காரணமாக உயர்கல்வி கற்று, இன்று பல் வேறு அரசு மற்றும் தனியார் உயர்பணிகளில் உள்ள னர். மாறாக, ஒப்பந்த மற்றும் தனியார்மயம்தான் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடனும், வறுமையுட னும் தொழிலாளர்களைப் பிணைத்து வைத்துள்ளது.

நிரந்தரப் பணி என்பது ஒரு குடும்பத்தை, வறுமை யின் பிடியில் சிக்கித் தொடரும் குலத்தொழில் சுழற்சியி லிருந்து விடுவிப்பதற்கான ஒரே வழியாகும். பள்ளி இடைநிற்றல் அதிகம் உள்ள ஏழைத் தொழிலாளர் கள், வறுமை மற்றும் கடன் சுமை காரணமாகவே இந்த வேலையை நாடுகின்றனர். இவர்களுக்குக் கவுரவ மான ஊதியமும், வேலைப் பாதுகாப்பும் வழங்கப் பட்டால் மட்டுமே, அவர்களின் அடுத்த தலைமுறை இப் பணியிலிருந்து வெளியேறி சமூக அந்தஸ்தைப் பெற முடியும்.

தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்

எனவே தமிழக அரசு,

1. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக மேற் கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

2. அரசாணை 152 மற்றும் 139 ஆகியவற்றை முழுமை யாகத் திரும்பப் பெற வேண்டும்.

3. தனியார்மயத்தினால் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் உயர் மட்ட வெள்ளை அறிக்கை மற்றும் சிறப்புத் தணிக்கை நடத்த வேண்டும்.

4. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்வதற் கான நடவடிக்கையைத் கால நிர்ணயத்துடன் தொடங்க வேண்டும். அதுவரை அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தின் நேரடி ஊழியர்களாகக் கருதப்பட்டு, தகுந்த ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

5. மாநகராட்சிகளில் உள்ள அனைத்து கொள்முதல் முறைகேடுகள் குறித்த ஊழல் வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

தனியார்மயம் என்பது ஊழலின் ஊற்றுக் கண்; நிரந்தரப் பணிதான் சமூக நீதி. இந்த மாற்றத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்போது, அது ஏற்கெனவே உள்ள நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் ஒரு அரசின் பாராட்டத்தக்க நட வடிக்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை. தொழி லாளர் நலன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் சுகாதார நலனும் உங்கள் கையில்தான் உள்ளது. கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கம், சிஐடியு