10 ஆம் வகுப்பு தேர்வுப் பணிக்கு தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எதிர்ப்பு
21 Mar 2026, 2:42 pm
<p><strong>10 ஆம் வகுப்பு தேர்வுப் பணிக்கு தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எதிர்ப்பு</strong></p>
<p>ராணிப்பேட்டை, மார்ச் 21 - ராணிப்பேட்டை தொடக்கக் கல்வி அலுவலரை வெள்ளியன்று (மார்ச் 20) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இராணிப்பேட்டை மாவட்டக் கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் உத்தரவின்படி, முன்னெப்போதும் இல்லாத புதிய நடைமுறையாக, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மையங்களில் அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆசிரியர் கூட்டணி விடுத்துள்ள கோரிக்கையில் முக்கிய அம்சங்கள் எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் அன்றாடக் கல்விப் பணிகளுக்கு இது பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும். எனவே, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தேர்வுப் பணி ஆணையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொடக்கக் கல்வித்துறையின் கல்விப்பணி எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் கே.ஆர். பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ. சரவணன் ஆகியோர் உடனிருந்து மனுவை அளித்தனர்.</p>
