தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேனாவின் சிப்பாய் பிரேம்சந்த் இந்தி இலக்கியத்தில் சமூக எதார்த்தவாதத்தை முன்னெடுத்த மக்கள் எழுத்தாளர் - பேரா. பெ.விஜயகுமார்

31 Oct 2026, 9:36 pm
பேனாவின் சிப்பாய் பிரேம்சந்த்  இந்தி இலக்கியத்தில் சமூக எதார்த்தவாதத்தை முன்னெடுத்த மக்கள் எழுத்தாளர் -  பேரா. பெ.விஜயகுமார்

பேனாவின் சிப்பாய் பிரேம்சந்த் இந்தி இலக்கியத்தில் சமூக எதார்த்தவாதத்தை முன்னெடுத்த மக்கள் எழுத்தாளர் - பேரா. பெ.விஜயகுமார்

வாரணாசி அருகிலுள்ள லமஹி கிராமத்தில் 1880இல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தன்பத் ராய். அவர்தான் பின்னாளில் இந்தி இலக்கிய வானில் நட்சத்திரமாக ஒளிர்ந்த பிரேம்சந்த். விடுதலை இயக்கம் வீறுகொண்டு எழுந்த காலத்து இந்தியாவை அவரது எழுத்துகள் அப்படியே பிரதிபலித்தன. நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கோதான், நிர்மலா, சேவாசதன், கர்மபூமி, கபன், பிரேமாசிரமம் உள்ளிட்ட ஒரு டஜன் நாவல்கள், மூன்று நாடகங்கள் என எழுதிக் குவித்தார். இந்தி, உருது இரு மொழிகளிலும் எழுதியதோடு, ஜார்ஜ் எலியட்டின் ‘சைலஸ் மார்னர்’, கால்ஸ்வொர்த்தியின் ‘சில்வர் பாக்ஸ்’, ‘ஜஸ்டிஸ்’, ‘ஸ்ட்ரைஃப்’ உள்ளிட்ட ஆங்கிலப் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார்.

காந்தியப் பற்றும் விடுதலை வேட்கையும்

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சொந்த முயற்சியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். இந்திய இலக்கியங்களோடு மேலை இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். அண்ணல் காந்தியும் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயும் அவரைக் கவர்ந்த ஆளுமைகள். காந்தியின் ஒத்துழையாமை அறைகூவலை ஏற்று அரசுப் பணியைத் துறந்தார். விடுதலைப் போராட்ட ஈடுபாட்டால் காவல்துறையின் கண்காணிப்பிலேயே வாழ்ந்தார். 1936இல் லக்னோவில் நடந்த இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாட்டுக்கு அவரே தலைமை வகித்தார்.

ஊழல், இளம் விதவைகளின் துயரம், வரதட்சணைக் கொடுமை, காலனிய ஆட்சியின் கொடூரம், கிராமங்களில் ஜமீன்தார்களின் அராஜகம், விடுதலை இயக்கத்தின் வீரம் — இவையே அவரது படைப்புகளின் களம். ‘சேவாசதன்’ நாவல் எம்.எஸ். சுப்புலட்சுமி நடிப்பில் ‘சேவாசதனம்’ என்ற தமிழ்த் திரைப்படமானது. ‘கபன்’ இந்தியில் திரைப்படமானது.

தீயிலிட்ட நூலும் பிறந்த புனைபெயரும்

தொடக்கத்தில் ‘நவாப் ராய்’ என்ற புனைபெயரில் எழுதினார். விடுதலைப் போராட்டத் தியாகங்களைச் சித்தரிக்கும் ஐந்து கதைகளின் தொகுப்பு அப்பெயரில் வெளியானது. ஆங்கிலேய மாவட்ட அதிகாரி அந்நூலைத் தடை செய்து, பிரதிகளைத் தீயிலிட்டுக் கொளுத்தினார். இனி எழுதும் எதையும் தன் ஒப்புதலின்றி வெளியிடக்கூடாது என்றும் ஆணையிட்டார். அதிகாரியின் கண்களுக்குத் தப்ப, புனைபெயரை ‘பிரேம்சந்த்’ என மாற்றிக்கொண்டு எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.

கர்மபூமி: விடுதலை வேள்வியின் நாவல்

உப்புச் சத்தியாகிரகக் காலத்தில் எழுதப்பட்ட ‘கர்மபூமி’ ஓர் அரசியல் நாவல். அதன் பக்கங்கள் முழுவதும் விடுதலைப் போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. படிப்பறிவற்ற எளிய மக்களை அன்றைய படித்த வர்க்கம் போராட்டக் களத்துக்கு அழைத்துச் செல்வதும், அநீதிக்கு எதிரான போராட்டத்தை அறிவார்ந்த சமூகம் முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும் நாவலின் மையம். சமரசமற்ற அப்போராட்டங்களில் பெண்கள் முன்வரிசையில் நிற்கின்றனர்.

நாவலில் இரு போராட்டக் களங்கள். வாரணாசியில் தொழிலாளர்கள் குடியிருக்க வீட்டுமனை கேட்டுப் போராடுகிறார்கள். ஹரித்துவார் அருகிலுள்ள கிராமத்தில் ஏழை விவசாயிகள் கொடிய வரிக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். அறமற்ற வழியில் செல்வம் சேர்த்த வணிகர் சமர்காந்தின் மகன் அமர்காந்த் நாவலின் நாயகன். பலமும் பலவீனமும் கொண்ட முழுமையான பாத்திரமாக அவனைப் படைத்துள்ளார் பிரேம்சந்த். பணமே குறியாக வாழும் தந்தையும், சேவாசிரமத்தில் சேர்ந்து சமூகப் பணியாற்றும் மகனும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறார்கள். பேராசிரியர் சாந்திகுமார் தலைமையில் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இளைஞர் படையின் முன்னணி வீரன் அமர்காந்த்.

மனைவி சுகதாவுடன் கருத்து முரண்பாடு, தந்தையுடன் கசப்பு, ஏழை இஸ்லாமியப் பெண் சகீனா மீதான காதல் — இவற்றின் நடுவே வீட்டைவிட்டு வெளியேறும் அமர்காந்த் ஹரித்துவார் அருகிலுள்ள கிராமத்தை அடைகிறான். கடும் வறட்சியிலும் ஜமீன்தாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் கொடூரமாக வரி வசூலிப்பதைக் கண்டு, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளைத் திரட்டிப் போராடுகிறான். கைதாகி லக்னோ சிறையில் அடைக்கப்படுகிறான். அவனுக்குப் பின் முன்னி போராட்டத்தைத் தொடர்கிறாள். நண்பன் சலீம் உயர் பதவியைத் துறந்து போராட்டத்தில் இணைகிறான். இறுதியில் வரி வசூல் நிறுத்தப்படுகிறது.

நகரில் மனம் மாறிய சுகதா தலித் மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறை செல்கிறாள். வீட்டுமனைப் போராட்டத்துக்கு அமர்காந்தின் தங்கை நைனா தலைமையேற்கிறாள். ஊர்வலத்தின் முன்னால் நின்ற அவளை, மனைவியின் பொதுவாழ்வை வெறுத்த கணவன் மணிராமே சுட்டுக் கொல்கிறான். மகளின் வீரமரணம் சமர்காந்தின் மனத்தை மாற்றுகிறது. நகராட்சி நிலம் வழங்க முன்வருகிறது. ஊர்ப் பெரியவர்களின் பரிந்துரையில் போராளிகள் விடுதலையாகிறார்கள். நைனாவுக்கு ஊரின் மையத்தில் சிலை எழுகிறது. பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் இணைகின்றனர்.

நாவலின் மற்றொரு வலுவான பாத்திரம் முன்னி. ஆங்கிலேயர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, இரு ஆங்கிலேயர்களைக் கொன்று பழிதீர்க்கிறாள். நீதிமன்றம் அவளை விடுவிக்கிறது. அழைத்துச் செல்ல ஓடோடி வருகிறான் கணவன் சுமர். ஆனாலும் ‘களங்கப்பட்டவள்’ என்ற உணர்வால் கணவனையும் மகனையும் பிரிந்து சேவைப் பாதையில் செல்கிறாள்.

கோதான்: குடியானவர்களின் காவியம்

1936இல் பிரேம்சந்த் மறைவதற்குச் சில மாதங்கள் முன் வெளியான ‘கோதான்’, இந்தியக் குடியானவர் வாழ்வின் மகாகாவியம் எனப் போற்றப்படுகிறது. சரஸ்வதி ராம்நாத் இதனை ‘கோதானம்’ என அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாயகன் ஹோரி கோடிக்கணக்கான கிராம மக்களின் பிரதிநிதி. ஒரு சராசரிக் குடியானவனின் நிறைகளும் குறைகளும் அவனிடம் உண்டு. குடும்ப கௌரவத்தைக் காக்கப் போராடிக் கடனாளியாகி, பணக்காரர்களின் சூழ்ச்சியால் உழவு மாடுகளை இழந்து கூலியாகிறான். வீட்டு வாசலில் ஒரு பசு நிற்க வேண்டும் என்ற அவனது கனவு நனவாகாமலே போகிறது. நாவலின் முடிவு வாசகரின் கண்களைக் கலங்கச் செய்கிறது.

அவன் மனைவி தனியா கல்வியறிவற்றவள், கடுமையாகப் பேசுபவள். ஆனால் கருணை மிக்கவள், அநீதியை எதிர்க்கும் துணிவுள்ளவள். மகன் கோபர் விதவை ஜுனியாவை மணந்தது பிடிக்காவிட்டாலும், நிராதரவாக நின்ற அவளுக்கு அடைக்கலம் தருகிறாள். பட்டணத்துக்குச் செல்லும் கோபர், கௌரவத்துக்கு அஞ்சாமல் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளும் புதிய தலைமுறையின் அடையாளம்.

இதற்கு இணையாக, தொழிலதிபர் கண்ணா, பத்திரிகையாளர் ஓங்கார்நாத், டாக்டர் மாலதி உள்ளிட்ட நகர்ப்புறப் பாத்திரங்களின் கதையும் விரிகிறது. கண்ணாவின் பேராசை பெருநஷ்டத்தில் முடிகிறது; அவரது தொழிற்சாலை தீயில் சாம்பலாகிறது. இறுதியில் இவர்கள் சமூகத் தொண்டில் ஒன்றிணைகிறார்கள். மாதாதீன் என்ற பிராமணனின் சாதிப் பெருமிதத்தை பிரேம்சந்த் கேலி செய்கிறார். ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் காந்தி. அந்த ஆன்மாவை பிரேம்சந்த் அளவுக்குச் சித்தரித்த இந்திய எழுத்தாளர் வேறில்லை.

சிறுகதைகளின் சிற்பி

பிரேம்சந்தின் சிறுகதைகள் நாவல்களைவிட அதிகம் பாராட்டப்படுகின்றன. சொற்சிக்கனம், எதிர்பாராத முடிவு, குறைந்த பாத்திரங்கள், காலம்–இடம்–பொருள் ஒழுங்கமைவு ஆகியவை அவற்றை நேர்த்தியாக்குகின்றன. அவர் வாழ்ந்த மண்ணின் மணம் அவற்றில் கமழ்கிறது. இரத்தமும் சதையுமான மனிதர்களின் சலனங்களும் சஞ்சலங்களுமே அவற்றின் கருப்பொருள். பல கதைகளில் விலங்குகளும் பாத்திரங்களாக வருகின்றன. நகைச்சுவையும் பகடியும் கலந்த நடை அவருக்கே உரியது.

‘ஈத்கா’ கதையில் பெற்றோரை இழந்த சிறுவன் ஹமீது, பாட்டி ஆமினாவின் அரவணைப்பில் வளர்கிறான். பெருநாள் வந்தும் பேரனுக்குப் புத்தாடை வாங்கவோ இனிப்பு செய்யவோ வழியின்றித் தவிக்கிறார் ஆமினா. ரம்ஜான் நாளில் நண்பர்கள் பொம்மைகளும் இனிப்புகளும் வாங்க, மூன்றே காசுகள் வைத்திருக்கும் ஹமீது, சப்பாத்தி சுடும்போது பாட்டியின் விரல்கள் சுடுவதை நினைத்து ஓர் இரும்பு இடுக்கியை வாங்குகிறான். நண்பர்கள் கேலி செய்கிறார்கள். வீட்டில் ‘ஏதாவது தின்பண்டம் வாங்கியிருக்கலாமே’ என்கிறார் பாட்டி. அவர் விரல் வடுக்களைத் தடவி, ‘இனி நீங்கள் கையைச் சுட்டுக்கொள்ள வேண்டியதில்லை’ என்கிறான் ஹமீது. பாட்டி அவனை உச்சிமுகர்ந்து அணைத்துக்கொள்கிறார். இளமையில் வறுமையின் கொடுமையையும் சிறுவனின் பாசத்தையும் ஒருசேரக் காட்டும் கதை இது.

நேர்மைக்குக் கிடைத்த பரிசு

‘உப்பு வரி ஆய்வாளர்’ (நமக் கா தரோகா) கதை சமூகத்தில் புரையோடிய ஊழலைப் பேசுகிறது. ஆங்கிலேயரின் சுரண்டல்களில் ஒன்றான உப்பு வரியை வசூலிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் லஞ்சத்தில் குபேரர்களானார்கள். நேர்மையான ஆய்வாளர் வம்சிதர், வரி ஏய்க்கும் வணிகர் பண்டிட் அலோப்பிதீனின் வண்டிகளைத் தடுத்து நிறுத்துகிறார். லஞ்ச ஆசைக்கும் மிரட்டலுக்கும் மசியவில்லை. ஆனால் பணம் பாதாளம் வரை பாய்கிறது. சாட்சிகள் வணிகர் பக்கம் சாய, வழக்கில் தோற்று வேலையையும் இழக்கிறார் வம்சிதர். லஞ்சமும் வாங்காமல் வேலையையும் இழந்துவிட்டாரே என்று பெற்றோரும் மனைவியும் அவரை நிந்திக்கிறார்கள். ஒருநாள் அதே பண்டிட் வீடு தேடி வந்து, ‘உங்களைப் போல் நேர்மையான அதிகாரியை நான் கண்டதில்லை. என் சொத்துகளை நிர்வகிக்க நீங்களே வேண்டும்’ என்று பெரும் சம்பளம், பங்களா, வாகனத்துடன் வேண்டுகிறார். நேர்மையே சிறந்த கொள்கை என்பதைக் கதை உறுதிப்படுத்துகிறது.

சதுரங்கமும் சாம்ராஜ்யமும்

‘சத்ரஞ்ச் கே கிலாடி’ (சதுரங்க ஆட்டக்காரர்கள்) கதையை சத்யஜித் ரே திரைப்படமாக்கினார். அவத் நவாபு ஆட்சியின் இறுதிக் காலத்தில் லக்னோவில் நடக்கும் கதை இது. மிர்ஜா, மீர் என்ற இரு பிரபுக்கள் சதுரங்கப் பைத்தியங்கள். ஊருக்கு வெளியே பாழடைந்த மசூதியில் ஆடிக்கொண்டிருக்கும்போது ஆங்கிலேயப் படை நகருக்குள் நுழைகிறது. மக்கள் அஞ்சி ஓடுகிறார்கள். அவர்களைக் காக்க வேண்டிய இருவரும் கடமையை மறந்து ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். ஆட்டத்தில் மூண்ட சண்டையில் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு மடிகிறார்கள். குடி, கூத்து, வேட்டை என்று கேளிக்கையில் மூழ்கிய நவாபுகளும் சிற்றரசர்களுமே ஆங்கிலேயர் இந்தியாவை எளிதில் கைப்பற்ற வழிவகுத்தனர் என்ற வரலாற்று உண்மையைச் சொல்கிறது இக்கதை.

சாதியத்தின் கோர முகம்

‘சத்கதி’ (நற்கதி) கதை சாதியக் கொடுமையின் நேரடிச் சித்திரம். பிரமிடு வடிவச் சாதியக் கட்டமைப்பின் உச்சியில் இருப்பவர்கள் அடித்தட்டு மக்களை அடிமைகளாக நடத்துவதை அது அம்பலப்படுத்துகிறது. மகளின் திருமணத்துக்கு நாள் குறிக்க பண்டிதர் காசிராம் வீட்டுக்கு வருகிறான் சமார் சாதியைச் சேர்ந்த துக்கி. கூலியின்றி அவனிடம் பல வேலைகள் வாங்கும் பண்டிதர், பெரிய மரக்கட்டையைப் பிளக்கச் சொல்கிறார். பசியும் சோர்வும் வாட்ட, துக்கி அங்கேயே செத்து விழுகிறான். பிணத்தை அகற்ற சமார்கள் மறுக்கிறார்கள். இரவு முழுவதும் பிணம் அக்ரகாரத்தில் கிடக்கிறது. விடியலில் பண்டிதரே கயிறு கட்டி இழுத்துச் சென்று ஊர்க்கோடியில் வீசுகிறார். கழுகுகளும் நாய்களும் அதைக் குதறுகின்றன. இக்கதைக்காக ‘வெறுப்பைப் பரப்புபவர்’ எனத் தூற்றப்பட்டார் பிரேம்சந்த்.

எழுத்தாளர் ஒரு சிப்பாய்

‘ஒடுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட மனிதருக்காக வாதாடுவதே எழுத்தாளரின் கடமை. எழுத்தாளர்கள் சமூகத்தின் கொடியை ஏந்திச் செல்லும் சிப்பாய்கள்’ என்று முற்போக்கு எழுத்தாளர் மேடையில் முழங்கினார் பிரேம்சந்த். ஆயுதம் தாங்கிய வீரனைப் போல எழுதுகோலை ஆயுதமாக்கி நாட்டுக்குப் பணியாற்றியதால் ‘பேனாவின் சிப்பாய்’ என அழைக்கப்பட்டார். காந்தியச் சிந்தனையில் தோய்ந்திருந்த அவர், வாழ்வின் இறுதிக் காலத்தில் மார்க்சியம் நோக்கி நகர்ந்தார் என்பது வரலாறு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.