செயலின் வல்லமை - ஐ.வி.நாகராஜன்
26 Sept 2026, 8:24 pm

செயலின் வல்லமை - ஐ.வி.நாகராஜன்

“தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்” என்ற குறளின்படி, ஒரு செயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு ஆராய்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்களுக்குப் பெறுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை. கனவுகளை மெய்ப்படுத்துவதற்கும், நினைத்த காரியத்தைச் சாதிப்பதற்கும் மனமும், எண்ணமும், ஆசையும் மட்டுமே போதுமானவை அல்ல. தகுந்த வழியில் செயலாற்றுவதே நமக்கு வெற்றிகளை ஈட்டித் தரும். ஏதோ காரணத்தால் செயல்படாமல் இருந்துவிட்டால் நாம் பின்தங்கி விடுவதோடு, தோல்வியின் வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருப்போம். நாம் எதிர்கொள்ளும் தடைகள், சோம்பேறித்தனமான குணம் மற்றும் தயக்கங்களை மீறிச் செயலாற்றும் பழக்கமே வெற்றியைப் பெற்றுத் தரும்.

செயல்திறனும் திட்டமிடலும்

வெற்றிக்கான தேவைகளில் நமது செயல்திறன் மிகவும் முக்கியமானதாகும். ஒருவர் உலகத்தின் தலைசிறந்த அறிவையும் பல திறன்களையும் பெற்றிருக்கலாம்; ஆனால், அதைப் பயன்படுத்திச் செயல்களைச் செய்யத் தவறினால் எந்தப் பலனும் கிடைக்காது. நடவடிக்கை எடுக்கப்படாத அறிவு வெறும் மாயையாகவே மனதளவில் நிலைத்துவிடும். மாறாக, செயல்படுத்தப்படும் அறிவு வல்லமை பெற்ற சக்தியாக மாறுகிறது. பெரிய திட்டங்களும் இலக்குகளும் நமக்குத் தேவைதான்; இருப்பினும், அவற்றை அடையச் செய்யும் செயல்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. திறமையும் கற்ற கல்வியும் இருந்தபோதிலும், சரியான பாதையில் திட்டம் வகுத்து, முனைப்புடன் செயலாற்றுபவர்களே சாதனைகளைப் படைக்கின்றனர். என்ன செயலை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்து உழைப்பதும், விடாமுயற்சியோடு செயல்படுவதும் உண்மையான செயல்திறனாகும்.

வாழ்க்கையும் இலக்குகளும்

இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும், அதற்குத் தேவையான வளங்களையும் பதவிகளையும் பெறவும் விரும்புகின்றனர். ஆனால், விருப்பம் இருப்பினும் தகுந்த முறையில் செயல்படத் தவறும்போது பல ஆசைகள் கனவுகளாகவே மறைந்துவிடுகின்றன. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணமாக இருந்தாலும் அது நாம் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் தொடங்குகிறது. காலையில் ஐந்து மணிக்கு எழுவது என்று தீர்மானம் செய்வது ஒன்று; ஐந்து மணி ஆனதும் எழுந்து செயல்படுவது இன்னொன்று. உடல்திறனை மேம்படுத்துவது குறித்துப் பல புத்தகங்களைப் படித்துத் திட்டங்கள் தீட்டினாலும், அவை செயலாக மாறாத வரை அந்த எண்ணம் மனதளவிலேயே நின்றுவிடும். எனவே, அனைத்து வெற்றிகளையும் ஈடேற வைப்பது நமது செயல்களே ஆகும்.

கடின உழைப்பும் வெற்றியும்

பொதுவாக மனித மனம் எளிதான செயல்களைச் செய்வதையே விரும்புவதாலும், தோல்வி மற்றும் சங்கடங்களைத் தவிர்க்க நினைப்பதாலும் பலரும் கடினமான முயற்சிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். வெற்றி என்னும் கோபுரத்தின் உயரங்களை எட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் இதுவே முக்கியக் காரணமாகும். கடினமான செயல்களைச் செய்வதன் மூலமும், நமது எல்லைகளைக் கடந்து புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலமுமே அரிய வெற்றிகள் நம்மை எட்டும். தனிப்பட்ட வளர்ச்சியும் கூட கடினமான செயல்களைச் செய்வதன் மூலமே ஏற்படுகிறது. காரியங்களைச் செய்து முடிக்கக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்பட்டாலும், அவற்றுக்கெல்லாம் அடிப்படை சிறப்புமிக்க செயல்களைச் செய்து முடிப்பதே ஆகும். பேசுவதுடன் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செய்து காட்டுவதே வெற்றியை அடைவதற்கான வழியாகும்.