பூஞ்சோலை கிராமத்தில் வீடுகளை இடிக்க முயற்சி: விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்
59 minutes before

பூஞ்சோலை கிராமத்தில் வீடுகளை இடிக்க முயற்சி: விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி,ஆக.23 -கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதி பூஞ்சோலை கிராம மக்களை வீடுகளை,விவசாய நிலங்களை விட்டுவெளியேற்றும் முயற்சியை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் ஞாயிறன்று (ஆக.23) துவங்கியது.

மலை மற்றும் வனப்பகுதியான அஞ்செட்டி வட்டம் வண்ணத்திபட்டி அருகே பூஞ்சோலை கிராம பகுதி உள்ளது.இங்கு 3 தலைமுறைகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்திற்கும் வீடுகளுக்கும் பட்டா கேட்டு வட்டாட்சியர், சாராட்சியர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் பல போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். ஆனால், இதுவரை பட்டாக்கள் வழங்கப்படவில்லை.

போராட்டங்கள் தீவிரமடையும் போதெல்லாம், பட்டா கொடுப்பதாக கடிதம் வாயிலாக உறுதிஅளிக்கின்றனர். அதன்பிறகு வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுகின்றனர். இந்நிலையில், வனங்களில் உள்ள வீடுகளுக்கும் நிலங்களுக்கும் பட்டாக்கள் கொடுப்பதில்லை எனக் கூறி, 2006 வனஉரிமை சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

அத்துடன் பல கிராமங்களையும் வீடுகளையும் விவசாய நிலங்களையும் விட்டு மக்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க அரசு அதிகாரிகள் பூஞ்சோலை மக்களின் விவசாய வாழ்விட பகுதிகளில் மண் பரிசோதனை நடத்தினர். அப்போது அரசு அதிகாரிகள் மக்களை வெளியேற்ற வேண்டி இருக்கும் என கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி அஞ்செட்டி வட்டாட்சியர்அலுவலகத்தில் ஏற்கனவே உறுதி அளித்தபடி வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங்க கோரி இப்பகுதி மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஞாயிறன்று (ஆக.23) பூஞ்சோலை குடியிருப்பு மற்றும் விவசாய நிலப் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டா கிடைக்கும் வரை தொடர் காத்திருப்புபோராட்டம் துவங்கியது.

மலைவாழ் மக்கள் சங்கத்தின்மாவட்ட செயலாளர் குமாரவடிவேல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட செயலாளர் இருதயராஜ்,மார்க்சிஸ்ட் கட்சி வட்டசெயலாளர் தேவராஜன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பிரகாஷ் காத்திருப்பு போராட்டத்தை துவக்கிவைத்தார். மாநில செயலாளர் பி.பெருமாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.இந்நிலையில், அஞ்செட்டி வட்டாட்சியர், காவல்துறையினர் விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைநடத்தினர்.

மக்கள் வீடுகளுக்கும் நிலததிற்கும் உடனடியாக பட்டா வழங்கவேண்டும். பட்டா வழங்கும் காலம்வரை இப்பகுதி மக்களை எக்காரணம் கொண்டும் சிரமப்படுத்தவோ, தொந்தரவோ செய்யக் கூடாது. மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதை வட்ட,மாவட்ட நிர்வாகம் ஒத்துக் கொள்ள வேண்டும் என

வலியுறுத்தப்பட்டது. தீர்வு ஏற்படாதநிலையில் போராட்டம் தொடர்கிறது.