எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி!
13 Jul 2026, 5:41 pm

எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி செலுத்தியுள்ளது.

இதுகுறித்து ததீஒமு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது;

உழைக்கும் மக்களின் வாழ்வியலை படைப்பாக்கிய எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி செலுத்துகிறது.

தமிழ் இலக்கிய உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி இயற்கையடைந்தார். சிறுகதைகள், நாவல்கள் வரலாற்று நூல்கள் என பல்வேறு படைப்புகளை தமிழ் சமூகத்திற்கு வழங்கியவர்.

பூமணியின் " பிறகு" நாவல் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை, மற்றும் சாதிய ஒடுக்குமுறை, வறுமை, சமூக உறவுகள் ஆகியவற்றைப் படம்பிடித்து காட்டுகிறது என்றால் அவரது "வெக்கை" சாதிய அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பையும், எதிர்வினையையும் பேசுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அசுரன் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இவரது படைப்புகள் விவசாயம், நிலம், உழைப்பு, கிராமப்புற மக்களின் வாழ்க்கை, வறுமை , ஆகியவற்றை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டவை ஆகும்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து அவர் எழுதிய பிரம்மாண்ட வரலாற்று நாவல் அஞ்ஞாடி ஆகும். பல்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாக உள்ள அஞ்ஞாடிக்கு 2014 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

அவரது வயிறுகள், நொறுக்குகள், நல்ல நாள் ஆகிய சிறுகதைகளும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, உழைப்பை ,சாதிய ஒடுக்குமுறையை முக்கிய கருப்பொருளாக உருவாக்கப்பட்ட சிறுகதை தொகுப்புகள் ஆகும்.

உழைக்கும் மக்களின் பாடுகளைப் பேசிய எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது இதயபூர்வமான அஞ்சலியை உரியதாக்குகிறது என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்