வழிப்பாதை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல்
5 Mar 2026, 3:59 pm

வழிப்பாதை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல்

தருமபுரியில் சிபிஎம் கடும் கண்டனம்!

தருமபுரி, மார்ச் 05 - பென்னாகரம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட வழிப்பாதையை மீட்கக் கோரி அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆக்கிரமிப்பும் அதிகாரிகளின் மெத்தனமும் பென்னாகரம் வட்டம், பெரிய கடமடை கிராமத்தில் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த வழிப்பாதையைத் தனிநபர் ஒருவர் முள்வேலி அமைத்துத் தடுத்துள்ளார். இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் முதல் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, மக்களுக்கு ஆதரவாக நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில், வியாழனன்று பெரிய கடமடை பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டம் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருவாய்த்துறையோ அல்லது காவல் துறையோ பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை. காவல் துறையின் அராஜகப் போக்கு போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் பாபு சுரேஷ் மற்றும் ஏரியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்களை மிரட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி. மாதன், ஜி. சக்திவேல் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் பி. சக்கரவேல் ஆகியோர் சுமூகத் தீர்வு காண முயன்றனர். ஆனால், அதிகாரிகள் அவர் களைத் தாக்கி, கீழே தள்ளிக் குண்டுக் கட்டாக வேனில் ஏற்றியுள்ளனர். ஆண் காவலர்களைக் கொண்டு பெண்களைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று காட்டு தர்பார் நடத்தியுள்ளனர். எந்தவொரு வருவாய்த்துறை அதிகாரியும் இல்லாமல், காவல் துறையினர் மட்டுமே தன்னிச்சையாகச் செயல்பட்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதக் காவலும் மிரட்டலும் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை வேனில் ஏற்றிச் சென்ற காவல் துறையினர், அவர்களுக்குப் பல மணிநேரமாகத் தண்ணீர் கூட வழங்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். பிடித்துச் செல்லப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே. விஸ்வநாதன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் வி. ரவி ஆகியோரைப் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் மரியாதை குறைவாகப் பேசி மிரட்டியுள்ளனர். மற்ற கட்சியினரைச் சந்திக்க அனுமதி அளித்துவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி மறுத்து அவமதித்த காவல் துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.