அமுதத்தில் விஷம்
6 Jun 2026, 8:23 pm
<p><strong>அமுதத்தில் விஷம்</strong></p><p>அவசரமாய் சுவாசிக்க வேண்டும் காரோட்டி ஊருக்கு வெளியே போ! இந்த நகரத்துக் காற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை காற்றின் நிறம் கறுப்பு இல்லை இதில் பிராணவாயு பிரித்தெடுக்க நாசிக்குச் சக்தியில்லை சுற்றியுள்ளது காற்றல்ல இது பெட்ரோல் டீசலின் வளிவடிவம் இதைச் சுவாசிப்பதெனில் எந்திரமூக்கு வேண்டும் எனக்கு பாவிகளே! மரணப்படுக்கையில் காற்றைத் தள்ளிய மாபாவிகளே! புகை பிடித்தீர்கள் காற்று ரணமானது எந்திரப் புகை எழுந்தது காற்று இறுகியது குப்பைகள் வானளாவின காற்று கெட்டிப்பட்டது எப்படி சுவாசிப்பது? நுரையீரல் இப்போது எஃகினால் வேண்டும் எனக்கு அவசரமாய் சுவாசிக்க வேண்டும் காரோட்டி ஊருக்கு வெளியே போ! உணவு திரிந்தால் இரைப்பையைப் பட்டினி போடுவேன் தண்ணீரில் கிருமிகளா தாகத்தைத் தள்ளி வைப்பேன் காற்று திரிந்தால் சுவாசப் பையும் பட்டினி கிடக்குமா? அணு உலைகளின் பெருமூச்சு ஆலைகளின் கருமூச்சு தொழிற்சாலைச் சுடுமூச்சு வாகனங்களின் புகைமூச்சு எல்லாம் கலந்தால் அடுத்த நூற்றாண்டில் மனிதன் இருப்பானோ? இல்லை அடுத்த நூற்றாண்டில் காற்று இருக்குமோ? பற்று நோய் அறுத்த துறவியர்க்கும் புற்று நோய் வருவதேன்? அது நஞ்சூட்டிய காற்றின் நன்கொடையப்பா! பத்தினிப் பெண்டிர் சொல்லியும் பருவ மழை பொய்த்ததேன்? மேகத்தில் பால்கறக்கும் சுத்தக்காற்று செத்துவிட்டதப்பா! அணுகுண்டுத்துகள்களினால் காற்று எப்போதோ கற்பிழந்து போனதப்பா! காற்றே உயிர் குடித்தால் இனி தொட்டிலே கல்லறையாகும் அவசரமாய் சுவாசிக்க வேண்டும் காரோட்டி ஊருக்கு வெளியே போ! அங்கே எனக்கும் முன்னால் ஏராளக் கார்கள் தேனடையின் தேனீக்களாய் மனிதர்கள் கேட்டேன் சுவாசிக்க வந்தவர்களாம் மூர்ச்சையானேன்.</p>
