பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் அபத்தமான அறிவுரைகளும்! - ஸ்வேதா
13 May 2026, 9:16 pm

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் அபத்தமான அறிவுரைகளும்! - ஸ்வேதா

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா நேர்காணல்

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், மே 10 அன்று தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். மொத்தத்தில் நாட்டு மக்கள் வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்கிறார். பிரதமரின் இந்த உரை எதார்த்தத்திற்குப் புறம்பானது என்றும், அரசின் தோல்விகளை மக்கள் மீது சுமத்தும் முயற்சி என்றும் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா கடுமையாக விமர்சிக்கிறார். - ஸ்வேதா

கேள்வி: மக்கள் ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் கூறியுள்ளாரே, இது சாமானிய மக்களின் சேமிப்பைப் பாதிக்காதா?

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா: சாதாரண மக்கள் ஒன்றும் அன்றாடம் தங்கம் வாங்கிக் குவிப்பதில்லை. தற்போதைய விலைவாசி உயர்வில் அன்றாட உணவிற்கே அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஓரளவு வசதியுள்ள மக்கள், நமது சமூகப் பண்பாட்டு மரபுகள் காரணமாகத் திருமணம் போன்ற சுப காரியங்களுக்காகத் தங்கம் வாங்குகிறார்கள். இதைத் தவிர்த்து, தங்கம் என்பது ஒரு சொத்து (Asset). பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சேமிப்பாகக் கருதுகிறார்கள்.

தங்கம் வாங்காதே என்று சொல்லும் அரசு, மக்களின் பணத்தின் மதிப்பு குறையாமல் இருக்க என்ன உத்தரவாதம் அளிக்கிறது? இந்திய அரசின் பத்தி ரங்கள் அல்லது வங்கிகளில் கிடைக்கும் வட்டி, தங்கம் தரும் பாதுகாப்பைத் தருமா? டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 100 ரூபாயைத் தாண்டிச் சரிந்து கொண்டிருக்கும் சூழலில், தங்கம் வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது என்று மக்கள் கருதுவதில் என்ன தவறு? பெரும் வியாபாரிகளும், ஊக வணிகர்களும்தான் தங்கத்தை முதலீடாக மாற்றுகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தாமல் சாதாரண மக்களைத் தங்கம் வாங்காதே என்று சொல்வது அபத்தமானது.

கேள்வி: பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்வதைத் தவிருங்கள் என்று பிரதமர் கூறியுள்ளாரே?

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா:

இது மிகவும் வேடிக்கையானது. சாதாரண மக்கள் என்ன விமானத்திலா அன்றாடம் பறக்கிறார்கள்? அல்லது ஏழை மக்கள் கார் வைத்துக் கொண்டு பெட்ரோலை வீணடிக்கிறார்களா? அவர்கள் பொதுப் போக்கு வரத்தைச் சார்ந்துதான் இருக்கிறார்கள். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று உண்மை யில் அரசு நினைத்தால், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் அரசு என்ன செய்கிறது? பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் சாலைகளில் கார்களைக் குவித்துவிட்டு, இப்போது மக்க ளைப் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்வது முரண்பாடா னது. செல்வந்தர்கள் மீதும், கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் ‘விண்ட்ஃபால் டாக்ஸ்’ (Windfall Tax) எனப்படும் கூடுதல் வரிகளைப் போட்டு வசூலிப்பதன் மூலமே நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும். அதைச் செய்யாமல் மக்களைச் சாப்பிடாதே, தூங்காதே என்று சொல்வதைப் போன்ற பொறுப்பற்ற பேச்சு இது.

கேள்வி: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதும், அந்நிய முதலீடுகள் வெளியேறுவதும் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா:

இன்று இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலே ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி யடைவதுதான். ஒரு டாலருக்கு 100 ரூபாய் என்ற நிலையைத் தொட்டுவிட்டோம். இவ்வளவு நாளும் “எல்லாம் சரியாக இருக்கிறது” என்று பொய் பிம்பத்தை உருவாக்கினார்கள். ஆனால் எதார்த்தம் என்னவென்றால், இந்தியா மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. இங்கு கொண்டு வந்த பணத்தை அவர்கள் டாலராக மாற்றி வெளியே கொண்டு செல்கிறார்கள். அவர்கள் வரும்போது ஒரு டாலர் 50 ரூபாயாக இருந்து, செல்லும்போது 100 ரூபாயாக இருந்தால் அவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். அதனால் வேகமாக முதலீடுகள் வெளியேறுகின்றன. இதைத் தடுக்க அரசு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும், சந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் பிரதமர் முதலீடுகளை மேற்கொள்ளாமல், மக்களைப் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி மிரட்டுகிறார்.

கேள்வி: ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் போர் தொடுத்தபோது ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று சொன்ன அரசு, இப்போது ஏன் திடீரென பதற்றமடைகிறது?

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா:

இங்குதான் அரசின் அயலுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவுக்கும் இடையிலான போர் இன்று நேற்றல்ல, பல மாதங்களாக நீடிக்கிறது. அப்போதெல்லாம் “நாங்கள் டிரம்ப்பிடம் அனுமதி வாங்கிவிட்டோம், ஆயில் வாங்குவதில் சிக்கல் இல்லை” என்று ஒரு அடிமை தேசத்தைப் போலப் பேசினார்கள். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டுக்கு இது இழிவான நிலை அல்லவா?. நமக்கு அனுமதி கொடுக்க டிரம்ப் யார்?

ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசும் இனப்படு கொலைக் குற்றவாளியான இஸ்ரேல் அரசும் ஈரான் மீது போர் தொடுத்த பொழுது ஈரானுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்கவில்லை. மாறாக கொலை யாளி நேதன்யாஹூவை இந்தியப் பிரதமர் பாசத்துடன் கட்டிப்பிடிக்கும் காட்சிகளை நாம் பார்த்தோம். அதேபோன்று தனக்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் நெருக்கம் இருப்பதாக மோடி காட்டிக்கொண்டார். இவ்விரு போர் வெறி அரசுகளின் நடவடிக்கையை கண்டிக்கத் தவறியதன் மூலம் பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் நாம் மதிப்பு இழந்துள்ளோம். பல துருவ உலகை நோக்கிய பயணத்தை வலுப்படுத்தத் தவறியுள்ளோம்.

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் ஈரானும் உறுப்பினராக உள்ளது. பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்காவின் மிரட்டல்களை எதிர்த்துத் தைரியமாகப் பேசுகின்றன. ஆனால் இந்திய அரசு, டிரம்ப்பின் வர்த்தக மிரட்டல்களுக்குப் பயந்து மௌனமாக இருக்கிறது. டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 18% முதல் 25% வரை சுங்கவரி விதிக்கப்போவதாக மிரட்டுகிறார். இதை எதிர்க்கக்கூடத் துணிவில்லாத மோடி அரசு, பன்னாட்டுச் சந்தையில் நமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டது.

ரஷ்யா நமக்குக் கச்சா எண்ணெய் தொடர்ந்து வழங்கினாலும், சர்வதேசப் போக்குவரத்து மற்றும் வர்த்தக விதிமுறைகளை அமெரிக்கா தனக்குச் சாதகமாக மாற்றுவதை இந்தியா கண்டிக்க வேண்டும். குறிப்பாக, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவர் மனைவி கடத்தப்பட்டபோது கூட இந்திய அரசு வாய் திறக்கவில்லை. இவ்வளவு பலவீனமான அயலுறவு கொள்கையை வைத்துக் கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியாது.

கேள்வி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளும், வாராக்கடன் தள்ளுபடியும் வழங்கப்படுவது குறித்து அரசு ஏன் பேசுவதில்லை?

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா:

இதுதான் இந்த அரசின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையே. “ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்” (Ease of Doing Business) என்ற பெயரில் பெரும் முதலாளிகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்கிறார்கள். வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். ஆனால் ஒரு விவசாயி கடன் கட்டத் தவறினால் அவரை அடித்து உதைத்துச் சிறையில் தள்ளுகிறார்கள். 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை வஜா செய்துவிட்டு, “நாங்கள் ரத்து செய்யவில்லை, தற்காலிகமாக நீக்கியுள்ளோம்” என்று கண்துடைப்பு வசனம் பேசுகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை கொடுத்தால் அவர்கள் முதலீடு செய்வார்கள், வேலைவாய்ப்பு பெருகும் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. முதலீடுகள் எதுவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, மாறாகப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையைச் சுரண்டுவதற்கே வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடியை அரசு எவ்வாறு கையாள்கிறது?

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா:

சர்வதேச நெருக்கடியால் ரசாயன உரங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாய உற்பத்திக்கான அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அரசு இருக்கிறது. ஒருபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்பன் குறைப்பு என்று பேசுகிறார்கள், மறுபுறம் ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI) மையங்கள் அமைப்பதாகக் கூறி பெரும் மின்சாரத் தேவையை உருவாக்குகிறார்கள். இதற்கான ஆற்றல் மூலம் நம்மிடம் இருக்கிறதா?

கார்பன் வெளியீடு பிரச்சனையில் கார்பன் பட்ஜெட்டில் பெரும் பகுதியை அபகரித்துவிட்டு நம்மை கார்பன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளச் சொல்லும் மேலை நாடுகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்து வதும் அவசியம். நாமும் எரிபொருள் பயன்பாட்டில் நவீன தொழில்நுட்பம் மூலமாக சிக்கனம் பேண வேண்டும். ஆனால் மோடி அரசு இந்த திசையில் செல்ல தயாராக இல்லை.

‘ஆத்ம நிர்பார்’ என்று வாயில் நுழையாத இந்திச் சொற்களைப் பேசுவதால் மட்டும் சுயசார்பு வந்துவிடாது. கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் எரிசக்தி சுயசார்புக்காக உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய தொழில்நுட்பங்களைப் பெற்று, ஆற்றல் இழப்பைக் குறைப்பதற்கான அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்காமல், மக்க ளைக் கார் ஓட்டாதே, பெட்ரோல் நிரப்பாதே என்று சொல்வது நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்பும் செயலாகும்.

பிரதமர் மோடி தனது தோல்விகளை மறைக்கவே இதுபோன்ற அபத்தமான அறிவுரைகளை வழங்குகிறார். ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்ற நாட்டுத் தலைவர்களை மிரட்டுவதையும், கடத்துவதையும் கண்டிக்கக்கூடத் துணிவில்லாத மோடி அரசு, சாமானிய மக்களைத் தியாகம் செய்யச் சொல்வது ஏற்புடையதல்ல. முறையான வரிவிதிப்பு, பொதுத்துறை முதலீடு மற்றும் உறுதியான அயலுறவுக் கொள்கை ஆகியவற்றின் மூலமே தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியும். பிரதமர் வழக்கம்போல மையப் பிரச்சனையைத் தவிர்த்துவிட்டு ‘டமால் டுமீல்’ உரைகள் ஆற்றுவது ஆரோக்கியமானதல்ல.