தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்
8 Apr 2026, 5:30 am

தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்

கண்ணூர், ஏப். 7 - 'வகுப்புவாத ஒன்றிய அரசை வீழ்த்தவும், தென்னிந்தியாவின் உரிமைகளைக் காக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் போன்ற துணிச்சலான தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்..' என்று புகழ் பெற்ற திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

கேரள சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய அவர், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது உரையில் பிரகாஷ் ராஜ், 'நான் இன்று ஒரு பக்கத்தை சார்ந்து நிற்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமது நம்பிக்கையாக பினராயி விஜயன் இங்கே இருக்க வேண்டும் என்று கேரளா தீர்விக்கும் என நம்புகிறேன். வகுப்புவாத ஒன்றிய அரசை வீழ்த்திப் போராடும் தலைமை நமக்குத் தேவை. கடந்த ஐந்து ஆண்டுகளாக தென்னிந்தியாவின் நம்பிக்கையாக பினராயி விஜயன் திகழ்கிறார். கேரளாவில் பினராயி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா இவர்களே நம்மைப் போன்றவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை' என்றார்.

ஒன்றிய பாஜக அரசைச் சாடிய அவர், 'தேர்தல் என்பது இன்று ஒரு கேலிக்கூத்தாகி விட்டது. அவர்களுக்குத் தேர்தல் என்பதே தேவையில்லை. தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, ஊடகங்கள் என அனைத்தும் அவர்களிடம் உள்ளன. கடந்த தேர்தலில் '400 இடங்கள்' என்று சொன்னவர்கள், வெறும் 240 இடங்களையே பெற்றனர். ஆயினும் 72 இடங்கள் சந்தேகத்திற்குரியவை,' என்று சுட்டிக்காட்டினார்.

தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவது குறித்து அவர் எச்சரித்தார்: 'அடுத்த 5-6 ஆண்டுகளில் அவர்கள் நாட்டை இந்து ராஷ்டிரமாகவும், இந்தி ராஷ்டிரமாகவும் மாற்றத் துடிக்கிறார்கள். தொகுதி மறுவரையறை மூலம் மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி-க்களை நியமிக்கத் திட்டமிடுகிறார்கள். இதனால் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்படும்,' எனக் குறிப்பிட்டார்.

'கலா விவாதம் முதல் நீட் தேர்வு வரை, தென்னிந்திய முதலமைச்சர்களே ஒன்றிய அரசை எதிர்த்துத் துணிச்சலாக நின்றனர். என் அன்பான கேரளாவிற்கு ஒரு குடிமகனாக நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: மாநிலத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். அடுத்த ஐந்தாண்டுகள் தென்னிந்தியா போராட வேண்டியுள்ளது,' என்று பிரகாஷ் ராஜ் தனது உரையை நிறைவு செய்தார்.