லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் 50 காசுகள் உயர்த்திய மோடி அரசு 10 நாட்களில் 4-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
25 May 2026, 8:48 pm

லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் 50 காசுகள் உயர்த்திய மோடி அரசு 10 நாட்களில் 4-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

சென்னை, மே 25 - ஒன்றிய பாஜக அரசானது, பெட்ரோல், டீசல் விலைகளை, கடந்த 10 நாட்களுக்குள் 4-ஆவது முறையாக உயர்த்தியுள்ளது.

மே 15 அன்று லிட்டருக்கு 3 ரூபாயும், மே 19 அன்று 90 காசுகளும், மே 23 அன்று சுமார் 91 காசு களுமாக பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, திங்கட்கிழமை (மே 25) அன்று, லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரை விலையை உயர்த்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 46 காசுகள் அதிகரித்து, லிட்டர் 107 ரூபாய் 77 காசுகளாக உயர்ந்துள்ளது. டீசல் விலை 2 ரூபாய் 57 காசுகள் அதிகரித்து லிட்டர் 99 ரூபாய் 55 காசுகளாக உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் லிட்டர் 113 ரூபாய்

இதேபோல பெட்ரோல் விலை - தில்லியில் 102 ரூபாய் 12 காசுகளாகவும், மும்பையில் 111 ரூபாய் 21 காசுகளாகவும், கொல்கத்தாவில் 113 ரூபாய் 51 காசுகளாகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலையைப் பொறுத்தவரை- தில்லியில் 95 ரூபாய் 20 காசுகள், மும்பையில் 97 ரூபாய் 83 காசுகள், 99 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம், நாடு முழுவதும், திங்களன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சராசரியாக 2 ரூபாய் 61 காசுகள் என்ற கணக்கிலும், டீசல் விலை 2 ரூபாய் 71 காசுகள் என்ற கணக்கிலும் உயர்ந்துள்ளது.

மே 15 முதல் கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுகள் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை 91 டாலராக சரிந்தது!

சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை 108 டாலர் வரை சென்ற நிலையில், திங்களன்று காலை 100 டாலருக்கும் குறைவாக 4 சதவிகித சரிவைக் கண்டது. இந்தியப் பொதுச்சந்தை வர்த்தகத்தில் (MCX), ஜூன் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை 4.49 சதவிகிதம் (412 ரூபாய்) சரிந்து, ஒரு பேரல் 8 ஆயிரத்து 756 ரூபாயாகக் குறைந்தது. சர்வதேசச் சந்தையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை ஒரு பேரலுக்கு 4.80 டாலர் (4.79 சதவிகிதம்) சரிந்து 95.41 டாலராகக் குறைந்தது. அதேபோல், வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடி யட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 5.07 டாலர் (5.25 சதவிகிதம்) சரிந்து 91.53 டாலராக வீழ்ச்சியடைந்தது.

வரிகளைக் குறைக்க பெ. சண்முகம் வலியுறுத்தல்!

பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க, அதன் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். “பெட்ரோல்- டீசல் விலையை, இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு.

இன்று பெட்ரோல் ரூ.107.77, டீசல் ரூ.99.55. இதில் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல ஒன்றிய - மாநில அரசுகள் வரிமூலம் வருவாயாக பெறுவது மட்டும் 50 சதவிகிதம். உங்களால் சர்வதேசச் சந்தையில் விலையைக் குறைக்க முடியாது. அமெரிக்கா - ஈரான் சண்டையை நிறுத்த முடியாது.

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? அரசுக்கு வரும், வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரணம் வழங்க ஒன்றிய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்!” என்று பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.