தாய் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் ரேசன் கார்டில் பெயர் நீக்கம்: மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
11 Nov 2025, 6:02 pm
<p><strong>தாய் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் ரேசன் கார்டில் பெயர் நீக்கம்: மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு </strong></p>
<p>தஞ்சாவூர், நவ.11– தஞ்சாவூர் அருகே, பெரிய புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி(55), இவரது கணவர் ரவிச்சந்திரன். இவர்களுக்கு நவீன்குமார் என்ற மகனும், அகிலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி கடந்த மாதம், ரேசன் கடையில் பொருட்களை வாங்கச் சென்றபோது, தனது பெயர் கார்டில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதை அறிந்து, தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தார். அப்போது, தான் இறந்து விட்டதாக மகன் கூறியதால், பெயர் நீக்கம் செய்து இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். போலியாக இறப்பு சான்றிதழ் வழங்கிய மகன் மீதும், அந்த சான்றிதழை வைத்து பெயரை நீக்கிய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த வாரம் ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. தொடர்ந்து, ரமணி திங்கட்கிழமை மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். தான் இறந்துவிட்டதாக பொய்யைக் கூறி, போலியான இறப்பு சான்றிதழ் கொடுத்து, வேறு குடும்ப அட்டை வாங்கிய மகன் மீதும், லஞ்சம் பெற்றுக்கொண்டு, பொய்யான இறப்புச்சான்று தயார் செய்து எனது பெயரை நீக்கிய வட்ட வழங்கல் அலுவலர்களையும் விசாரணை செய்ய வேண்டும். எனது இறுதி காலம் வரை எனது பெயர் கொண்ட ரேசன் கார்டு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட ரமணி கூறினார்.</p>
