மாணவிகள் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் அறிவுரை
28 May 2026, 11:59 pm
<p><strong>மாணவிகள் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் அறிவுரை</strong></p><p>தஞ்சாவூர், மே 28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் த. மேனகா தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட, அளவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளியாக உள்ளது. பள்ளி வளர்ச்சியிலும், மாணவிகள் நலனிலும் அக்கறை செலுத்தும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளிக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும். மாணவிகள் தேர்ச்சி பெறுவது முக்கியமல்ல, குறிப்பிடத்தக்க மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அவர்கள் வேண்டிய பாடப்பிரிவினை உயர் கல்வியில் பெற முடியும். எனவே, அதற்கு ஏற்ப மாணவிகள் உழைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட ஆசிரியர்கள், பெற்றோர் களுக்கு கீழ்ப்படிந்து ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப. சேகர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் எஸ். மகேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவித் தலைமையாசிரியர் ம.காளீஸ்வரி நன்றி கூறினார். முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.70 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள் சார்பில் தலைமையாசிரியருக்கும், 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.</p>
