கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிரான உழவர்-தொழிலாளர் எழுச்சி
31 Jan 2026, 3:56 pm

கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிரான உழவர்-தொழிலாளர் எழுச்சி

இந்தியாவின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதாக அமைந்துள்ளன. கடந்த 2018-இல் நாசிக் முதல் மும்பை வரை நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் நீண்ட நடைபயணமும், தில்லி எல்லையில் 380 நாட்கள் நடந்த போராட்டமும் இந்திய விவசாயிகளின் போராட்டக் குணத்தை உலகுக்குக் காட்டின. இந்தச் சூழலில், பால்கர் நடைபயணம், மீண்டும் நாசிக் - மும்பை நடைபயணம், விதை மசோதா, மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டச் சிதைவு குறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் விஜூ கிருஷ்ணன் விரிவாக அலசுகிறார்.

கேள்வி : அண்மையில் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நடந்த பிரம்மாண்ட நடைபயணப் போராட்டத்தின் பின்னணி மற்றும் அதன் வெற்றி குறித்துக் கூற முடியுமா? பதில் : பால்கர் போராட்டம் என்பது மக்களின், குறிப்பாக பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான ஒரு பெரும் எழுச்சி. சிபிஐ(எம்) மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இவர்கள் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணிநேரத்தில் நடந்தே கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர்.

சுமார் 7 மணிநேரம் நடந்த நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ வினோத் நிகோலே ஆகியோர் முன்னிலை யில் விவசாயிகளின் அனைத்து உள்ளூர் கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது ஒரு மகத்தான வெற்றியாகும். கேள்வி : இந்தப் போராட்டத்தை நாட்டின் முன்னணி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் : இது ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மை. கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் (கோடி மீடியா), விவசாயிகள் மற்றும் பழங்கு டியினரின் போராட்டங்களைப் புறக்கணிக்கின்றன. 2018 நீண்ட நடைபய ணத்தின் போதும் இதுவே நடந்தது. ஆனால், சமூக ஊடகங்கள் வழியாக இந்தப் போராட்டத்தின் வீச்சு வைரலான பிறகு, சில ஊடகங்கள் இதைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மக்கள் சக்தியே நமது உண்மையான ஊடகம் என்பதற்கு இது சான்று.

கேள்வி: பால்கர் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான நில உரிமை குறித்து விளக்குங்கள்? பதில் : வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் ஏற்கெனவே போராட்டங்கள் மூலம் நிலங்கள் வழங்கப்பட்டாலும், விவசாயிகள் உண்மையில் எவ்வளவு நிலத்தை வைத்திருந்தனரோ அவ்வளவு நிலம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. குறைந்த அளவு நிலமே பட்டா போடப்பட்டிருந்தது. இதனுடன், கோவில் நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை உழுது வரும் விவசாயிகளுக்கே அந்த நிலத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. கேள்வி : மகாராஷ்டிராவில் வத்வான் மற்றும் முர்பி துறைமுகத் திட்டங் கள் விவசாயிகளையும் மீனவர்களையும் எவ்வாறு பாதிக்கும்? பதில் : இந்த இரண்டு துறைமுகத் திட்டங்களும் அந்தப் பகுதியில் உள்ள மீனவ சமூகத்தையும், கடற்கரையோர விவசாயிகளையும் முழுமையாக அழித்துவிடும். 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் விதிகளைப் புறக்கணித்துவிட்டு, எந்த ஆலோசனையும் இன்றி தன்னிச்சையாக அரசு நிலங்களைப் பறிக்க முயல்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற் காக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பலி கொடுக்கும் செயலாகும்.

கேள்வி: தில்லி போராட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பின்பும், அரசு அவற்றை மீண்டும் கொண்டு வர முயல்வதாக ஏன் கருதுகிறீர்கள்? பதில் : வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதாகவும் மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. மாறாக, தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) மூலமாக அதே கார்ப்பரேட் கொள்கைகளைத் திணிக்கஅரசு முயல்கிறது. கேள்வி:புதிய விதை மசோதா (Seed Bill) விவசாயிகளுக்கு ஏன் ஆபத்தானது? பதில் : விதை சந்தையின் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை நான்கு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. புதிய மசோதா இந்த நிறு வனங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது. விலைக் கட்டுப்பாடு குறித்து இதில் எந்த விதியும் இல்லை. மேலும், விதைகளின் தரம் குறித்து அந்தந்த நிறுவனங்களே ‘சுய சான்றிதழ்’ (Self-certification) அளித்துக் கொள்ள அனுமதிப்பது விவசாயிகளின் உற்பத்தியைப் பெருமளவு பாதிக்கும். கேள்வி : விதைகளால் பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா? பதில் : புதிய மசோதாவில் போலி விதைகளால் நஷ்டம் ஏற்படும்போது நிறுவ னங்களுக்கு மிகக் குறைந்த தண்டனையே விதிக்கப்படுகிறது. நிறுவனங்களைப் ‘கருப்புப் பட்டியலில்’ வைக்கவோ, உரிமத்தை ரத்து செய்யவோ வழியில்லை. கீழ் மட்ட அதிகாரிகளை மட்டும் தண்டிப்பதன் மூலம் பெரும் நிறுவனங்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளும். இது விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தும் செயலாகும். கேள்வி : மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் குறித்தான உங்கள் அச்சம் என்ன? பதில் : மின்சாரத் திருத்தச் சட்டம் என்பது மின் விநியோகத் துறையை முழுமை யாகத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையாகும். உதாரணமாக, சண்டிகரில் 200 முதல் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய பொதுத்துறை மின் விநியோக நிறுவனம் வெறும் 871 கோடி ரூபாய்க்குத் தனியார் வசமானது.

ஸ்மார்ட் மீட்டர்கள் வந்த பிறகு, சில இடங்களில் 3எச்பி மோட்டார் வைத்திருக்கும் விவசாயிக்கு மாதம் 10,000 முதல் 50,000 ரூபாய் வரை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேள்வி : ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் விவசாயப் பணிகளை எப்படி முடக்கும்? பதில் : ஸ்மார்ட் மீட்டர்கள் செல்போன் ரீசார்ஜ் போன்றது. பணம் தீர்ந்தவு டன் மின்சாரம் துண்டிக்கப்படும். சாகுபடி காலங்களில் (Peak Season) பணம் கட்ட முடியாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், நீர்ப்பாசனம் தடைபட்டு மொத்த பயிரும் கருகிவிடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, ஏழை விவசாயிகள் இருளில் தள்ளப்படுவார்கள். கேள்வி : மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) அரசு செய்து வரும் மாற்றங்கள் என்ன? பதில் : முதலில் அதன் பெயரில் இருந்து ‘மகாத்மா காந்தி’ பெயரை நீக்கிவிட்டு ‘ராம் ஜி’ (Ram G) என மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, அந்தத் திட்டத்தின் ஆன்மாவையே சிதைக்கும்செயலா கும்.

வேலை உரிமையை (Right to work) இது படிப்படியாக நீர்த்துப்போகச் செய்கிறது. கேள்வி : வேலை உறுதித் திட்டத்தில் ‘பீக் சீசன்’ (Peak Season) கட்டுப்பாடு என்பது எதைக் குறிக்கிறது? பதில் : விவசாயப் பணிகள் அதிகமாக உள்ள 60 நாட்களில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படாது என்று அரசு கூறுகிறது. இதன் நோக்கம், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பைக் குறைத்து, அவர்களைக் குறைந்த கூலிக்கு நிலவுடைமையாளர்களிடம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதாகும். இது தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை ஒழிக்கும் முயற்சியாகும். கேள்வி : நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களின் பங்கு குறித்து நீங்கள் கூறும் தரவு என்ன? பதில் : முன்பு இந்தத் திட்டத்தின் நிதியை முழுமையாக ஒன்றிய அரசே வழங்கி யது. ஆனால் இப்போது 40 சதவீத நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்கி றார்கள். 125 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட வேண்டுமானால் ஆண்டுக்கு 3,40,000 கோடி ரூபாய் தேவை. அப்படியானால் மாநிலங்கள் மட்டும் 1,28,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இது மாநிலங்களின் நிதி நிலையைச் சீர் குலைக்கும், இதனால் 50 நாட்கள் வேலை கூட மக்களுக்குக் கிடைக்காது. கேள்வி : குறைந்தபட்ச ஆதார விலை (MSP) குறித்து 2014-இல் மோடி அரசு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? பதில் : உற்பத்திச் செலவில் 50% லாபம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை தருவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அது ஒரு “தேர்தல் கால விளம்பரம்” என்று கூறினர்.

இதை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் அரசாங்கம் பிரமாணப் பத்திரமே தாக்கல் செய்தது. இது விவசாயிகளை வஞ்சித்த செயலாகும். கேள்வி : C2+50% (சி2 + 50%) சூத்திரப்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படாததால் ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு? பதில் : எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த C2+50% சூத்திரப்படி விலை வழங்கப்படாததால், 2016 முதல் 2025 வரையிலான காலத்தில் இந்திய விவசாயிகள் சுமார் 24 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். 20 முக்கியமான பயிர்களைக் கணக்கிடும் போது இந்தத் தரவு கிடைக்கிறது. இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்குப் பதில் துயரத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. கேள்வி : பொதுக் கொள்முதல் முறையில் உள்ள குளறுபடிகள் யாவை? பதில் : அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது. பீகார், உபி, ஒடிசா போன்ற மாநிலங்களில் நெல்லுக்கு 2,300 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் விவசாயிகள் 1,200 முதல் 1,400 ரூபாய்க்குத் தள்ளுபடி விலையில் விற்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது குழந்தைகளுக்கு மிட்டாய்க்குப் பதில் ஒரு காகிதத்தில் ‘மிட்டாய்’ என்று எழுதித் தருவதைப் போன்றது. கேள்வி : விவசாயிகள் தற்கொலை குறித்த தற்போதைய புள்ளிவிவரங்கள் என்ன? பதில் : இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1.5 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் வேத னையான விஷயம் என்னவென்றால், இதே காலத்தில் சுமார் 3.5 லட்சம் தினக்கூலித் தொழிலாளர்களும் தற்கொலை செய்துள்ளனர். இது 12 மாநிலங்க ளின் தரவு மட்டுமே. முழுமையான தரவுகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

இது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது. கேள்வி : தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் குறித்து விவசாயிகள் சங்கம் ஏன் கவலைப்படுகிறது? பதில் : தொழிலாளர் சட்டங்கள் (Labor Codes) கார்ப்பரேட்டுகளுக்குச் சாதக மாகத் திருத்தப்படுகின்றன. 8 மணிநேர வேலை என்பது மாற்றப்பட்டு 12 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. வாரத்தில் 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி போன்ற முதலாளிகள் கூறுகிறார்கள். தொழி லாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மறைமுகமாகப் பாதிக்கும். கேள்வி : விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இந்த புதிய ஒற்றுமை எதைக் காட்டுகிறது? பதில் : கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விவசாய அமைப்புக ளும் தொழிற்சங்கங்களும் இப்போது கைகோர்த்துள்ளன. இடதுசாரி அமைப்பு கள் மட்டுமின்றி, மற்ற அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன.

இது வெறும் கோரிக்கைக்கான போராட்டம் மட்டுமல்ல, கார்ப்பரேட்-மதவாதக் கூட்ட ணிக்கு எதிரான மிகப்பெரிய வர்க்க அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. கேள்வி : வரவிருக்கும் பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்தின் முக்கியக் கோரிக்கைகள் என்ன? பதில் : நான்கு தொழிலாளர் சட்டக் குறியீடுகளைத் திரும்பப் பெறுவது, குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது, ஸ்மார்ட் மீட்டர்களை ரத்து செய்வது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்- சட்டத்தைச் சிதைப்பதைக் கைவிடுவது மற்றும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்றவை முக்கியக் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கேள்வி: இந்தத் தொடர் போராட்டங்கள் இந்திய அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்கள்? பதில் : விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைந்து தெருவில் இறங்கிப் போராடும்போது, அது ஆட்சியாளர்களின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும். பால்கர் முதல் தில்லி வரை நாம் கண்ட வெற்றிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றி ணைந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. இதுவே வரும் நாட்களில் நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். நன்றி : CPIM CC youtube channel தமிழில் தொகுப்பு : எஸ்.பி.ஆர்.