அமைதியே மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சி!
18 hours before

அமைதியே மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சி!

உலக அமைதி என்பது அரசியல் தலைவர்களின் அறைகூவல் மட்டுமல்ல; உலகின் கடைக்கோடியில் வாழும் சாமானிய மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் மிக அவசியமான ஒன்றாகும். ஒரு சாலையோர வாழைப்பழ வியாபாரி அதிகாலையில் கடன் வாங்கி வியாபாரத்தைத் தொடங்கி, இரவு வரை உழைத்து ஈட்டும் சிறிய தொகையை நம்பித் தான் அவருடைய குடும்பம் இயங்குகிறது. அவரிடம் வாங்குபவர்களும் கூலித் தொழிலாளர்களும் குறைந்த வருமானம் கொண்டவர்களுமே.

இப்போது இஸ்ரேல் – ஈரான் போன்ற சர்வதேச மோதல்களால் கப்பல் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி நாடுகளில் விலைவாசியும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் அதிகரிக்கிறது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற செலவுகளைக் குறைப்பதால், நுகர்வு குறைகிறது; இது ஏற்றுமதி நாடுகளின் உற்பத்தித் துறையைப் பாதிக்கிறது.திருப்பூர் இதற்குச் சிறந்த உதாரணம். பனியன் ஏற்றுமதி ஆர்டர்கள் குறையும்போது, உற்பதியும் தொழிலாளர்களின் வேலை நேரமும் குறைந்து வேலை இழப்புகளும் ஏற்படுகின்றன. இதே நிலை கோவை,சென்னை, ஓசூர், கரூர் எனப் பல்வேறு உற்பத்தி மையங்களுக்கும் பொருந்தும். தொழிலாளர்களின் வருமானம்குறைந்தவுடன் அவர்களின் நுகர்வும் குறைகிறது. அதன் தாக்கம் மீண்டும் அந்தச் சாலையோர வாழைப்பழ வியாபாரியைச் சென்றடைந்து அவருடைய வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

போர் என்பது ஒரு சாமானிய மனிதனின் வருமானத்தைப் பாதிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அதன் தொடர்ச்சியாக உயரும் விலைவாசியால் உணவு, எரிபொருள், கல்வி, மருத்துவம் போன்றஅனைத்துச் செலவுகளையும் சமாளிப்பது சவாலாகிறது. வருமானம் குறைந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது கடன் சுமை அதிகரித்து, குடும்பங்களுக்குள் மன அழுத்தம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது.கடந்த சில வருடங்களாகத் தொழிலாளர்களுக்குத் தங்களால் இயன்ற போனஸ் வழங்கி வந்த பல திருப்பூர் தொழில்முனைவோர், இன்று சர்வதேசச்சவால்களால் அதைக் குறைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொழிலாளர்கள்,தொழில்முனைவோர் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரியசவாலாக உள்ளது. இந்த நிலைமை இந்தத் தீபாவளியோடு முடிவுறட்டும்!அடுத்த இருபது ஆண்டுகள் இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடுகளில் ஒன்றாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. திருப்பூர் போன்ற உற்பத்தி மையங்கள் உலகளாவிய ஆடை ஏற்றுமதியில் பல உயரங்களை அடையத் தொழில்முனைவோரின் தன்னம்பிக்கை, தொழிலாளர்களின் உழைப்பு, அரசின் ஆதரவு ஆகியவற்றுடன் அமைதியான உலகச்சூழலும் அவசியத் தேவையாகும்.

பொருளாதாரம் என்பது வெறும் ஏற்றுமதி, பங்குச்சந்தை புள்ளிவிவரங்கள் அல்ல. ஒரு விவசாயியின் வருமானம், ஒரு தொழிலாளியின் சம்பளம், ஒரு சிறு வியாபாரியின் லாபம், ஒரு குடும்பத்தின் நிம்மதியான வாழ்க்கை என அனைத்தும் சேர்ந்ததுதான் உண்மையான பொருளாதாரம். மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தால்தான் நுகர்வு அதிகரித்து, உற்பத்தி பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்கெல்லாம் அடிப்படையாகத் தேவைப்படுவது அமைதியும் நிலைத்தன்மையுமே.

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் போர், எந்தத் தொடர்பும் இல்லாத மற்றொரு பகுதியில் வாழும் கடைக்கோடி மனிதனின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. போரில் வெற்றி பெறும் நாடுகளை விட, போர்களே இல்லாத உலகில் வாழும் மக்கள்தான் உண்மையான வெற்றியாளர்கள்.எனவே,அமைதியான போரில்லா உலகம் வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நாம் ஏற்போம்.உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்.

மனிதநேயம் தழைக்கட்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்வாதாரம்பாதுகாக்கப்படட்டும். இந்த தீபாவளி ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதார நிம்மதியைக் கொண்டுவரட்டும். அடுத்த இருபது ஆண்டுகள் திருப்பூரின் வளர்ச்சிக்காகவும், இந்தியாவின் உற்பத்தி எழுச்சிக்காகவும் பொற்காலமாக அமையட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- குமார் துரைசாமிதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர்