பட்டா ரத்து - ஏமனூர் கிராமத்தினர் அதிர்ச்சி
16 Mar 2026, 4:46 pm
<p><strong>பட்டா ரத்து - ஏமனூர் கிராமத்தினர் அதிர்ச்சி</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 16- பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக் குட்பட்ட ஏமனூர் கிராம மக்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு முறையான வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணை கட்டுமானப் பணியின் போது, அப்பகுதியில் வசித்த கிராம மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு இடம்பெயர்ந்த சுமார் 450 குடும்பங்கள், கடந்த 1996-ஆம் ஆண்டு ஏமனூர் பகுதியில் குடியேறினர். அப்போது அவர்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பட்டாக்கள் தற்போது ரத்து செய்யப்படுவதாக வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தங்களுக்கு முறையான மற்றும் நிரந்தரமான பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘திருவோடு ஏந்தி’ கவன ஈர்ப்புப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் தங்களுக்கு, குடியிருப்புப் பட்டாக்களை மீண்டும் உறுதி செய்து வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏமனூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
