பட்டுவாடா பணியாளர்களைத் தாக்க பறந்து வரும் பார்ட்னர்கள்! - அ.குமரேசன்
18 Nov 2025, 2:35 pm

பட்டுவாடா பணியாளர்களைத் தாக்க பறந்து வரும் பார்ட்னர்கள்!

அறிவியல் – தொழில்நுட்ப வல்லுநர்கள் பொது நோக்கங்களுக்காக உருவாக்கித் தருகிற எந்த ஒன்றையும் தனது அடங் காத அகோரப்பசிக்கு இரையாக்குவதுதானே முத லாளித்துவம்? உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் கள் ட்ரோன்களை மட்டும் சுதந்திரமாகப் பறக்கவிட்டு விடுமா என்ன? குறிப்பாக அமேசான் உள்ளிட்ட பொ ருள் விநியோக நிறுவனங்கள் இவற்றை விற்பனைப் பண்டமாக மட்டுமல்லாமல், தங்களது விற்பனையாள ராகவே களத்தில் இறக்கிவிடத் தொடங்கியிருக்கின் றன. ஏற்கெனவே பல நிறுவனங்கள் செயற்கை நுண் ணறிவு மனித எந்திரங்களை (ஏஐ–ரோபோ) உணவக ஊழியர்களாக நடமாட விட்டிருப்பதை அறிவோம்.

துரித வேலையிழப்பு

ஃபாஸ்ட் ஃபுட் செயின் எனப்படும் துரித உணவுச் சங்கிலித் தொடர் கட்டமைப்புகளில் சமையல் சார்ந்த ஏஐ எந்திரப் பணியாளர்களைப் பயன்படுத்தும்போது, உயிருள்ள மனித ஊழியர்களின் வேலைகள் 31% வரை குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உணவ கங்களில் மொத்த வேலைகளில் 80% வரை ரோபோக்க ளிடம் விடப்படும் வாய்ப்புள்ளது.

மேசைகளில் பரிமாறும் சர்வர் வேலைகளில் 51% வரையிலும், பணம் வாங்கிப்போடும் கவுன்ட்டர் பணியாளர்களில் 57% வரையிலும் வேலையிழப்பார் கள் என்று ஓர் ஆய்வறிக்கை கணிக்கிறது. பெரும் சில்லறை வர்த்தக அங்காடிகளில் காசாளர்களின் பங்கு 37% வரை குறையலாம் என, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் மெக் கின்சே குளோபல் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் இணைந்து நடத்திய அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் 2030-ஆம் ஆண்டுக்குள் – ஆம், அடுத்த ஐந்தே ஆண்டுக ளுக்குள் – ஏஐ புகுத்தலால் கிட்டத்தட்ட 30 கோடி வேலைகள் பறிபோகும். இது உலகளாவிய வேலை களில் சுமார் 9.1% ஆகும். சுமார் 37.5 கோடித் தொழி லாளர்கள் இதே ஐந்தாண்டுகளில் ஏஐ நுழைப்பால் தங்கள் தொழில்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் அந்த ஆய்வை மேற்கொண்ட வர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவையெல்லாம் தோராயமான மதிப்பீடுகள் தான். முழுமையான, அதிகாரப்பூர்வமான ஆய்வுகள் இனிமேல்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். உலக பொருளாதார மன்றம் (டபிள்யூ.இ.எஃப்.) அத்தகைய ஆய்வைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது.

வாசலுக்கு வரும் பறவை

இந்த நிலையில்தான், வீடுவீடாக வந்து பொருள்க ளை ஒப்படைத்துவிட்டுப் போகிற வேலைகளில் எந்தி ரப் பறவைகளை இறக்கிவிட விநியோகச் சங்கிலி நிறு வனங்கள் முடிவு செய்திருக்கின்றன. இது ஏதோ வேறு நாடுகளில் நிகழும் செய்தி அல்ல, இந்தியக் காட்சிதான்.

தற்போதைக்குப் பெரிய அளவில் இல்லாமல் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சோதனை முயற்சியாக ட்ரோன்களுக்கு “சார்ஜ்” ஏற்றப்படுகிறது. பெங்களூரு, குர்காவுன் உள்ளிட்ட, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள வட்டாரங்களில் மருந்துகளையும் மளிகைப் பொருட்களையும் வீட்டு வாசலுக்கு வந்து கொடுத்து விட்டுத் திரும்பிச் செல்லும் ட்ரோன்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.

“டெலிவரி பார்ட்னர்” என்று கௌரவமாகக் குறிப்பி டப்படும் ஊழியர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று வாடிக்கையாளரிடம் பொருளை ஒப்படைப்ப தற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, அதை விடப் பாதி யளவு நேரத்தில், அதற்கு ஆகக்கூடியதை விட மிகக் குறைந்த செலவில் விநியோகிக்க வைக்க முடியும். பல நாட்களில் இந்த டெலிவரி பார்ட்னர்கள் போக்கு வரத்து மிகுந்த சாலைகளில் 100 முதல் 180 கி.மீ. வரை யிலான வேகத்தில் “பறந்து” சென்றுதான் விநியோ கிக்கிறார்கள். பொதுவாக ஒரு கி.மீ. தொலைவுக் குள் விநியோகிப்பதற்கு அடிப்படை ஊதியமாக ரூ.15 வழங்கப்படும். கூடுதலாக ஒவ்வொரு கி.மீ. தொலை வுக்கும் ரூ.10 முதல் 14 வரையில் வழங்கப்படும். இதே வேலையை, உண்மையாகவே வானில் “பறந்து” வரும் ஒரு ட்ரோன் செய்யுமானால், அதற்கு ஆகக் கூடிய செலவு ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 4 ரூபாய்தான்.

அடுத்த அலை

‘இந்தியா டுடே’ நவம்பர் 9 இதழில் பத்திரிகை யாளர் ஆனந்த் சிங் இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை கவனத்திற்கு உரியது. கட்டுரையின் தலைப்பே, “வேலைநீக்கத்தின் அடுத்த அலை அலுவலகங்களில் அல்ல தெருக்களில் ஏற்படக் கூடும்” என்று நிலைமையைப் பளிச்சென உணர்த்து வதாக இருக்கிறது.

கட்டுரை கூறும் தகவல்களின்படி, இணையவழி மற்றும் விரைவு வணிகத் துறைகளின் விநியோகப் பணியாளர்கள் “குறைந்த திறன் – குறைந்த ஊதியம்” என்ற பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எந்திரமயமாக்கலால் – அதிலும் நவீன தொழில் நுட்ப மாற்றங்களால் – எளிதில் வேறு பணிகளுக்கு அல்லது வேலைகளை விட்டே தூக்கியடிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள்.

‘கிக் எகானமி” (Gig Economy) எனப்படும் குறுங்கால ஒப்பந்தப் பொருளாதாரத்தில் சுமார் 1 கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார் கள் என்று ஒன்றிய அரசின் ‘நிதி ஆயோக்’ தெரி விக்கிறது. ட்ரோன் விநியோகம் நடைமுறைக்கு வருமா னால், நகர்ப்புற நெருக்கடிச் சாலைகள் தவிர்க்கப் பட்டு விரைவான விநியோகம் நடைபெறும். அப் போது இவர்களில் பெரும்பகுதியினர் வேலையிழப் பார்கள் என்று கட்டுரையாளர் கூறுகிறார்.

கிக் தொழிலாளர்கள்

இங்கே “கிக் பொருளாதாரம்” பற்றிப் புரிந்துகொள் வோம். உணவு உட்பட பல்வேறு பொருள்களை வாடிக் கையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் நிரந்தர மல்லாத வேலைகளையே அந்த “கிக்” என்ற சொல் குறிக்கிறது. நாம் அன்றாடம் பார்க்கிற ஸ்விகி, சொமாட்டோ, அமேசான், ஃபிளிப்கார்ட், பிளிங்கிட், ஸெப்டோ, பிக் பாஸ்கெட், இன்ஸ்டாமார்ட், மீஷோ, டாடா கிளிக் உள்ளிட்ட பல நிறுவனங்களின் விநியோ கப் பணியாளர்கள், ஒரு சில ஆண்டுகளுக்கு என்ற சிறிய கால அளவிலேயே ஒப்பந்தம் செய்யப் படுவார்கள். ஊழியராக அல்லாமல் “கூட்டாளி” (பார்ட்னர்) என்ற அடையாளமே இவர்களுக்குச் சூட்டப்படும்.

ஓலா, ஊபேர், ரேபிடோ உள்ளிட்ட இணைய வழிப் பதிவு சார்ந்த கார், ஆட்டோ, பைக் ஓட்டுநர்க ளும் அந்த நிறுவனங்களின் பார்ட்னர்கள்தான். இவை யெல்லாம் வருவதற்கு முன்பே, அரசின் அஞ்சல் சேவையை ஓரங்கட்டுவதற்கென்றே நுழையவிடப் பட்ட தூதஞ்சல் எனப்படும் கூரியர் நிறுவனங்களிலும் பட்டுவாடாப் பங்காளிகள்தான்! இடைக்கால இசை நிகழ்ச்சி ஒப்பந்தம் என்ற பொருளில் ஜாஸ் இசைக் கலைஞர்களால் இந்த கிக் என்ற சொல் புழக்கத்திற் குக் கொண்டுவரப்பட்டதாம். பணி ஒப்பந்தம் என்பதற் கான “எங்கேஜ்மென்ட்” என்ற சொல்லின் சுருக்கமா கவே கிக் உருவானது என்ற கருத்தும் உண்டு.

நிறுவனங்களின் ஊழியர்களாக அல்லாமல் கூட்டாளிகளாகக் கருதப்படுவதால் இவர்களுக்கு முறையான விடுப்பு, காப்பீடு, காலமுறை ஊதியம், மருத்துவ உதவி போன்ற சமூகப் பாதுகாப்பு அரண் கள் எதுவும் கிடையாது.

தயக்கம் தளராதோ?

முன்பொருமுறை ஒன்றிய சாலைப் போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்காரி, ஓட்டுநர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதால் இந்தி யாவில், தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும் (செல்ஃப் டிரைவிங்) கார்களுக்கு அனுமதி வழங்க அரசு தயங்குவதாகக் கூறியிருந்தார். ஆயினும் பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் சில தொழில்நுட்ப நிறுவனங்களும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், பொ துச் சாலைகளைத் தவிர்த்த குறிப்பிட்ட சோதனைத் தடங்களில் தங்கள் தானியங்கி வாகன நுட்பங்களைப் பரிசோதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமல்லா மல், உள்நாட்டுத் தயக்கத்தை உடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அந்தப் பரிசோதனைகளில் இருக்கும் என்று ஊகிக்கலாம்.

அதேபோல், கோடிக்கணக்கானவர்களின் வேலை களைப் பறிக்கும் ட்ரோன் டெலிவரி ஏற்பாட்டை அரசு உடனடியாக ஊக்குவிக்க வாய்ப்பில்லை என்று சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆயினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் “உரிய” வழிகளைக் கையாண்டு தேவையான ஊக்கத்தைப் பெற்றுவிட மாட்டார்களா என்ன என்று சமூகவியலாளர்கள் கேட்கிறார்கள்.

வேடிக்கை காட்டும் இறக்கையில்லா எந்திரப் பறவைகள் வேலைக் களத்தில் ஏவுகணைகளாகப் பாயக்கூடும் என்ற எதிர்காலம் ஒருபோதும் நிகழ் காலமாக மாறாமல் தடுக்கும் வல்லமை ஒன்றுபட்ட உழைப்பாளிகளுக்கே இருக்கிறது. அந்த வல்லமை யை ஒருங்கிணைக்க, இந்த ட்ரோன் உண்மைக ளையும் மக்களிடம் எடுத்துரைக்கும் கடமையையும் உழைப்பாளிகள் நிறைவேற்றுவார்கள்.