பராகுவேயில் வங்கி திவாலால் தேசிய நெருக்கடி - அந்நாட்டு மக்கள் போராட்டம்
5 Nov 2026, 4:01 pm

பராகுவேயில் யூனோ வங்கியை மத்திய வங்கி கையகப்படுத்தியதால் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களால் தங்கள் பணத்தை எடுக்கவோ, பரிவர்த்தனை செய்யவோ முடியாத நிலையில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பராகுவேயில், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கியான யூனோ வங்கி திவாலானதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கவோ, பரிவர்த்தனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பராகுவேயின் 18 வயதுக்கு மேல் இருக்கும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதமாகும்.

வங்கியில் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நெருக்கடி, யூனோ வங்கியுடன் மட்டும் நின்றுவிடாமல், மேலும் 13 பரஸ்பர முதலீட்டு நிதி நிறுவனங்களும் பணம் திரும்பப் பெறுவதை முடக்கியுள்ளது. யூனோ வங்கிப் பத்திரங்களின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது. அரசின் ஓய்வூதிய நிதிக்குச் சொந்தமான சுமார் 38 கோடி டாலர் இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது.

பராகுவேயின் முக்கிய வர்த்தக நிறுவனங்களின் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளில் யூனோ வங்கி முக்கியப் பங்கு வகித்து வந்தது. முக்கியக் கடைகளில் நடைபெறும் அட்டைப் பரிவர்த்தனைகளில் மூன்றில் இரண்டு பங்கு இந்த வங்கி மூலமே நடைபெற்றன. தற்போது இந்தச் சேவைகள் முடங்கியுள்ளதால், நாட்டின் சில்லறை வர்த்தகம் பாதியளவு முடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக அதிகபட்சம் 1,700 டாலர் வரை மட்டுமே தரப்படும் என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான தேதியும் இதுவரை குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையே, நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநர் கார்லோஸ் கார்வல்லோ பதவி விலகியுள்ளார். மேலும், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் யூனோ வங்கியின் தலைவர் உட்பட 8 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நெருக்கடி ஒரு அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது. அதிபர் சாண்டியாகோ பெனா, அந்த வங்கியின் உரிமையாளர்களுடன் கொண்டுள்ள தொடர்பு மற்றும் பொது நிதியைக் கையாண்ட விதம் குறித்த சந்தேகங்கள் காரணமாக, எதிர்க்கட்சிச் சட்டமியற்றுபவர்கள் அவரைப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.