பாப்பா உமாநாத் : புரட்சியின் லட்சிய நதி
16 Dec 2025, 3:51 pm
<p><strong>பாப்பா உமாநாத் : புரட்சியின் லட்சிய நதி</strong></p>
<p>1931 ஆகஸ்ட் 5இல் புதுச்சேரியின் காரைக் கால் அருகில் உள்ள கோவில்பத்து கிராமத்தில் பிறந்த தனலட்சுமி, ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். 27 வயதில் கணவனை இழந்த தாய் அலமேலு, குழந்தைகளுடன் திருச்சி பொன்மலைக்குச் சென்று, ரயில்வே தொழிலாளர் சங்கத்தினரின் உதவியுடன் இட்லி சுட்டு விற்று வாழ்ந்து வந்தார். சிறுமி தனலெட்சுமி, பள்ளியில் முதல் மாணவி யாக விளங்கியதோடு, தாயாருக்கு உதவியாகவும் இருந்தார். அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறுமியை அன்பாக ‘பாப்பா’ என்று அழைத்ததே பின்னாளில் அவரது பெயராக நிலைத்தது. குடும்பச் சூழ்நிலையால் எட்டாம் வகுப்போடு கல்வியை நிறுத்திய பாப்பா, தொழிலாளர் தலைவர்களின் உரைகளைக் கேட்டு உலக நடப்புகளை அறிந்து கொண்டு, இடைவிடாத வாசிப்பின் மூலம் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில்... வெறும் 12 வயதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக” என வீர முழக்கமிட்டார். போலீஸ் கைது செய்த போது, “நான் ஓட மாட்டேன், என்னைக் கைது செய்யுங்கள்” என்று துணிவுடன் நின்றார். பாலர் சங்கத்தில் சேர்ந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டங் களில் கொடியேந்தி அணிவகுத்தார். இளம் பெண்ணாக மாதர் சங்கத்தில் இணைந்து, “கருங்காலிகளே திரும்பிப் போ, வேலை நிறுத்தத்தை உடைக்காதே” என முழக்கமிட்டு போராடினார். கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் இளம் தலைவர் களில் ஒருவரான தோழர் உமாநாத்தை திருமணம் செய்துகொண்டது அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அந்தத் திருமணம் சாதி, சடங்கு, தாலி, ஜாதகம் எதுவும் இல்லாமல் சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றது. தொழி லாளர்களின் மகத்தான தலைவர் எம்.கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்த அந்த திருமணத்தில் தந்தை பெரியார் பங்கேற்றார். பெண்ணுரிமைக்காய் பாடுபட்ட போராளி இளம் வயதிலேயே அரசியல் கட்டுரைகள் எழுதிய பாப்பா, ரயில்வே யூனியனில் ‘தொழிலரசு’ துணை ஆசிரி யராகவும், ‘மகளிர் சிந்தனை’ ஆசிரிய ராகவும் செயல்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி. ஜானகியம்மாளுடன் சேர்ந்து, தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தோற்று வித்து, அதன் செயலாளராகவும், அகில இந்திய தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டார். தமிழகத்தில் எங்கே எப் போது பெண்களுக்கு எதிரான வன்முறை கள் நடந்தாலும், பெண்களை அணிதிரட்டி போராட்டம் நடத்தி, நீதி பெற்றுத் தந்தார். சட்டமன்றத்தில் முழக்கம் 1989இல் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பாப்பா, பொன்மலை பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு வர முன்னின்று பாடுபட்டார். சட்டமன்றத்தில் பெண்களுக்கான சொத்து ரிமை சட்டம் நிறைவேற உறுதியான குரல் கொடுத்தார். “பொம்பள சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சு” என்ற பழ மொழியை எதிர்த்து அவைக் குறிப்பி லிருந்து நீக்க வைத்து வரலாறு படைத் தார். சட்டமன்றமே அதிரும் அளவுக்கு கணீர் குரலில் பேசி, பெண்களின் உரிமை களுக்காகப் போராடினார். இன்று பெண்கள் மீதான வன்முறை கள் அதிகரித்து வரும் வேளையில், சிதம் பரம் பத்மினி, பிரேமானந்தா ஆசிரமம், வாச்சாத்தி போன்ற சம்பவங்களை எதிர்த்து, தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான பெண்களை திரட்டிப் போராடி வெற்றி கண்டார். லட்சிய நதியாய் முன் னோக்கியே சென்ற பாப்பா உமாநாத், 2010ஆம் ஆண்டு தமது 79ஆவது வயதில் மறைந்தார். “நீங்கள் உயர்த்திய செங்கொடியை தாழவிடோம்” என்ற உறுதிமொழியுடன் அவரது வழியில் என்றென்றும் வீறு நடை போடுவோம்! பி.பூமயில், மாநிலக்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்)</p>
