பிஏபி சமச்சீர் பாசனத்தை வலியுறுத்தி உண்ணாநிலை
30 Oct 2026, 12:07 am
<p><strong>பிஏபி சமச்சீர் பாசனத்தை வலியுறுத்தி உண்ணாநிலை</strong></p><p>திருப்பூர், அக்.29-பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கடைமடை பகுதிகளான காங்கேயம், வெள்ளகோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சமச்சீர் பாசனத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கேயம் அருகேபகவதிபாளையத்தில் விவசாயிகள் காலவரையற்ற தொடர் உண்ணாநிலை இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.பிஏபி திட்டத்தில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும், கடை மடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் நிலையில், சில பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வான நிலையை மாற்றி சமச்சீர் பாசனத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வெள்ளகோவில் கிளை கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.</p><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 29ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.இப்போராட்டத்திற்கு காங்கேயம் காவல் துறை அனுமதி மறுத்தது. எனினும் சங்க அலுவலக வளாகத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று சங்கத் தலைவர் ப.வேலுச்சாமி அறிவித்தார். அதன்படி, வியாழனன்று பகவதிபாளையம் சங்க அலுவலக வளாகத்தில் பந்தல் அமைத்து விவசாயிகள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர் உண்ணாநிலையில் பங்கேற்க பெயர் கொடுத்திருந்த விவசாயிகளுடன், அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் சனியன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.</p>
