பாண்டியர் கால மதுரை: வரலாற்றின் மூடிய திரைகளை விலக்கும் மார்க்சியப் பார்வை - கே.வி.
31 May 2026, 8:19 pm

பாண்டியர் கால மதுரை: வரலாற்றின் மூடிய திரைகளை விலக்கும் மார்க்சியப் பார்வை - கே.வி.

எழுத்தாளர் அருணனின் அண்மைக்காலப் படைப்பு களில் மிக முக்கியமானது மதுரை வரலாறு குறித்த நூல்களாகும். கால வரிசைப்படி மதுரையைத் தரிசிக்க அவர் எழுதியுள்ள பாண்டியர், நாயக்கர், ஆங்கிலேயர் கால மதுரை ஆகிய மூன்று நூல்களையும் நாம் கட்டாயம் படிக்க வேண்டும்.

அந்த வரிசையில், சங்க காலம் தொட்டு சுல்தான்கள் ஆட்சி மற்றும் விஜயநகரப் பேரரசு காலம் வரை விவரிக்கும் ‘பாண்டியர் கால மதுரை’ என்னும் நூல், வரலாற்றுத் திரைகளை விலக்கி உண்மைகளைப் பேசுகிறது.

மதுரை என்றால் இன்றுள்ள நகரமோ மாவட்டமோ மட்டுமல்ல, பாண்டிய நாடு பேரரசாக விரிவடைந்திருந்த ஒட்டு மொத்த நிலப்பரப்பைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பாண்டியர் கால மக்களின் பொருளியல், சமூக மற்றும் சமய வாழ்வை மார்க்சியக் கண்ணோட்டத் தோடு அணுகியுள்ளார் ஆசிரியர்.

மன்னராட்சி முறை தன்னைத் தக்க வைத்துக் கொள்ளவும், நிலப்பிரபுத்துவ சமூகப் பாதுகாப்பிற்காகவும் சமணத்தை விட சைவ சமயம் எவ்வாறு பாண்டிய மன்னர்களுக்குத் துணையாக நின்றது என்ற புதிய வரலாற்றுப் பார்வையை ஆசிரியர் முன்வைக்கிறார்.

சோழ சாம்ராஜ்யத்தைப் போலவே பாண்டி யப் பேரரசிலும் ‘மனுதர்ம நால்வரு ணக் கட்டமைப்பு’ போற்றிப் பாதுகாக்கப் பட்டது என்ற உண்மை, பாண்டியர்களின் வெற்றிப் புகழ்ச்சிப் பெருமிதங்களை உடைத்து நொறுக்குகிறது.

கட்டாய மதமாற்றம் குறித்து இன்றைக்குப் பேசும் இந்துத்துவ வாதிகள், சம்மந்தர் காலத்திலேயே சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற மறுத்த சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்ற வரலாற்றை மறைக்க முடியாது என்பதைத் திருவிளையாடல் புராணச் சான்றுகளுடன் நூல் நிறுவுகிறது.

இந்தச் சித்திரவதைக் கதையைக் கேட்டால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையால், இன்றும் மதுரை சித்திரைத் திருவிழாவில் ‘கழுவேற்றுத் திருவிளையாடல்’ மக்கள் முன்பு படிக்கப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், சங்க காலத்தில் திருப்ப ரங்குன்றம் ‘முருகன் குன்றமாகவே’ இருந்தது என்றும், பிற்காலத்தில்தான் அது ‘சுப்பிரமணியன் மலையாகிப் போனது’ என்றும், அங்குள்ள குகைத் தளத்தில் சமணப் பள்ளி இருந்ததைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வழி நிறுவுகிறார்.

பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட ‘பிரமதேயங்களை’ உருவாக்கச் சாதாரணக் குடியானவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்ட துயரத்தையும், போர்களினால் மாண்ட எளிய மதுரை மக்களைப் பற்றியும் ஆசிரியர் வேதனையோடு பதிவு செய்துள்ளார்.

கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனப் பெருந்தரவுகளைத் திரட்டி, அதன் சாரத்தை மார்க்சிய நோக்கில் தந்துள்ளார் அருணன். மதுரையின் உண்மையான வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அறிவுப் பேழையாகும் இந்நூல். பாண்டியர் கால மதுரை ஆசிரியர்: அருணன் வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம், மதுரை பக்கங்கள்: 216 | விலை: ₹220 தொடர்புக்கு: 9940755965