திருச்சியில் டிச.23 மறியலை விளக்கி துண்டு பிரசுரம்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>திருச்சியில் டிச.23 மறியலை விளக்கி துண்டு பிரசுரம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச.18- சிஐடியு - மாநகர் மாவட்டக்குழு ஆலோசனைக் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஒன்றிய அரசு கடந்த நவ.21 ஆம் தேதி லேபர் கோடு திருத்தங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இது, அமல்படுத்தப்பட்டால் நூறு ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை என்பது இருக்காது. கூடுதலாக எவ்வளவு நேரம் பணி புரிய வேண்டும் என்பதை நிர்வாகங்களே முடிவு செய்யும். போனஸ் கணக்கிட்டு காலம் முடிந்து 6 மாதத்திற்குள் தர வேண்டும் என்பதை மாற்றி 2 ஆண்டுகள் வரை தள்ளி கொடுக்கலாம். மேலும், முறைசார தொழிலாளர் நல வாரியங்கள் மாநில அரசின் வசம் உள்ளதை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும். மேலும், தொழிலாளர் போராட்டங்களை, கிரிமினல் குற்ற நடவடிக்கையாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்துவதால் மேற்கண்ட அறிவிப்புகளை திரும்பப்பெற்று, 10 ஆண்டு காலமாக கூட்டப்படாமல் உள்ள தொழிலாளர் மாநாட்டைக் கூட்டி உரிய முடிவுகள் எடுக்க வலியுறுத்தி, டிச.23 ஆம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை திருச்சியில், சிங்காரத்தோப்பு அருகில் உள்ள பூம்புகாரில் இருந்து ஊர்வலமாகச் சென்று தெப்பக்குளம் தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. மேலும், இந்த மறியல் போராட்டத்தை விளக்கி வரும் டிச.18 - 20 தேதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
