பழனி கோயில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது
yesterday
<p>பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம், மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, புதூரை சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதற்கிடையில், ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். </p><p>இதை தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டனின் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தமான பல இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். ஆதாரங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் ஜஸ்டின் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை இன்று மாலை கொடைக்கானல் சாலையில் வைத்து கைது செய்தனர்.</p>
