தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூங்கில் காடுகளின் மௌன மொழி பச்சைமலைப் பழங்குடிகளின் வாழ்க்கைப் பயணம்! - சி.ஸ்ரீ ராமுலு

11 Jul 2026, 9:05 pm
மூங்கில் காடுகளின் மௌன மொழி பச்சைமலைப் பழங்குடிகளின் வாழ்க்கைப் பயணம்! - சி.ஸ்ரீ ராமுலு

மூங்கில் காடுகளின் மௌன மொழி பச்சைமலைப் பழங்குடிகளின் வாழ்க்கைப் பயணம்! - சி.ஸ்ரீ ராமுலு

திருச்சியிலிருந்து வடமேற்கே பயணித்தால், பச்சைமலையின் தழுவலில் அமைந்த முத்தையம்பாளையம் கிராமம் தெரியும். இங்கே வாழும் மலைக்குறவன் சமுதாயத்தினர் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் குறிஞ்சி நிலத்தின் பூர்வகுடிகள். காவியங்களும் கம்பன் பாட்டும் கொண்டாடிய இந்த மக்களின் பாரம்பரியம், இன்று நவீனம் மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளுக்கு இடையே ஒரு கடுமையான சவாலில் நிற்கிறது.

மூங்கில் வாழ்வின் வேர்களும் கலைநயமும்

பச்சைமலை அடிவாரத்து மக்களுக்கு மூங்கில் என்பது வெறும் மரமல்ல; அது அவர்களின் உயிரும் உணர்வும். மலையின் உள்ளடுக்குகளிலிருந்து முதிர்ந்த மூங்கில்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி வருவது தலைமுறைக் கல்வி. வெட்டி வந்த மூங்கிலை நுணுக்கமாக மெல்லிய நாராகப் பிரித்து, ‘பாவு’ மற்றும் ‘ஊடை’ இழைகளை விரல் நுணுக்கத்தால் பின்னி, எந்த இயந்திரமும் இன்றி முறம், தட்டி, கூடைகளை உருவாக்குகிறார்கள். முறம் என்பது தமிழர் வாழ்வின் அடையாளம்; கூடை என்பது அவர்களின் தலைமுறைகளின் தொட்டில். கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (65), பாப்பாத்தி (69) தம்பதியர், “இந்தத் தொழில் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பழகியது” என்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒரு நாளில் அதிகபட்சம் நான்கு கூடைகள் மட்டுமே பின்ன முடியும். இந்தத் தொழில் இல்லாத நேரங்களில் பருத்தி, மக்காச்சோளம், வெங்காய அறுவடைக் காலங்களில் பிறர் வயல்களில் கூலி வேலைக்கும் செல்கிறார்கள்.

நவீனம் தந்த நெருக்கடியும் சாதிச் சான்றிதழ்ப் போராட்டமும்

ஒரு காலத்தில் தினசரி பயன்பாட்டுப் பொருட்களாக இருந்த மூங்கில் கூடைகள், இன்று பிளாஸ்டிக் மற்றும் அலுமினியப் பொருட்களின் வரவால் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. “விற்பனை அடியோடு சரிந்துவிட்டது” என்று பாப்பாத்தி சொல்வதில் கூர்மையான வலி இருக்கிறது. வண்ணங்கள் பூசி நவீனப்படுத்தினாலும் கைவினைப் பொருட்களுக்குச் சற்று கூடுதல் விலை தர இந்த உலகம் மறுக்கிறது. பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் நஞ்சாகும் இக்காலத்தில், மட்கக்கூடிய மூங்கில் பொருட்கள் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்பதை உலகம் மறப்பது சோகம். முந்தைய தலைமுறையினர் படிக்காவிட்டாலும், இவர்களின் பிள்ளைகள் பி.காம், பட்டப்படிப்பு எனப் படித்துவிட்டனர். ஆனால், சாதிச் சான்றிதழ் பெறுவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களால் அரசு வேலை என்பது இன்றும் இவர்களுக்குக் குதிரைக் கொம்பாகவே நீடிக்கிறது. ‘மலைக்குறவன்’ என்ற அடையாளத்திற்கான நலத்திட்டங்கள் இவர்களை வந்தடையச் சான்றிதழே தடையாக உள்ளது. மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இப்போதுதான் துறையூர், முசிறி, லால்குடியில் சிலருக்கு மட்டும் சான்றிதழ் கிடைத்துள்ளது. இது போதுமான வெற்றியல்ல என்கின்றனர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் பி. டில்லி பாபு, ஏ.வி.சண்முகம் மற்றும் மாவட்டத் தலைவர்கள் வீரன், நல்லுசாமி, வத்தன், முருகேசன் ஆகியோர்.

ஒரு கேள்வி: ஒரு அழைப்பு

“அரசாங்கம் எங்கள் பக்கம் கருணை காட்ட வேண்டும்” என்று கோவிந்தன் சொல்வது யாசகமல்ல, அவர்களின் நியாயமான உரிமை. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர் அவர்களின் தொகுதிக்குள்தான் இந்தக் கிராமம் வருகிறது. அரசு இவர்களின் மூங்கில் பொருட்களுக்குப் போதிய சந்தையை உருவாக்கி, சாதிச் சான்றிதழ் மற்றும் வீட்டுமனை போன்ற அடிப்படை நலத்திட்டங்களை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். முத்தையம்பாளையம் கிராமத்துக் கரங்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.