முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை எப்படி வந்தது? - பெ.சண்முகம் கேள்வி
yesterday

தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது குறித்து ஆதவ் ஆர்ஜூனா பேச்சுக்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை எப்படி வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது என்பது முதலமைச்சரின் இறுதி முடிவு அல்ல என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது குறித்து பெ.சண்முகமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “மக்களுக்கு நல்லது செய்தால் ஆதரிப்பது, மக்களுக்கு எதிரானது என்றால் எதிர்ப்பது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை. எங்களை விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டோம். ஆதரிப்பது, எதிர்ப்பது, எடுத்துரைத்துப்பது, இடித்துரைப்பது தொடரும்.

தவெக-வால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் மக்களால் விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அதிமுக சார்பில் வெற்றிபெற்றுவிட்டு, தவெக சார்பில் அதே பதவிக்கு நிற்கிறார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்கள், அதே பதவிக்கு மீண்டும் நிற்கிறார்கள் என்ற கோவத்தில் மக்கள் இருக்கிறார்கள். பொதுமக்களின் எதிர்ப்பிலிருந்து பாதுகாக்க வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதா? என்று காவல்துறைதான் சொல்ல வேண்டும்.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு முதலமைச்சர் இறுதியான முடிவு எடுக்காமல் எப்படி அரசாணை வெளியே வந்தது? முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை வந்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஒப்புதலோடு வந்திருந்தால், அது தவரான முடிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்மொழிந்துள்ளதை ஏற்று இடத்தை மாற்ற வேண்டும்.

நாங்கள் வைத்துள்ள கோரிக்கை நியாயமானதா இல்லையா என்று பார்க்காமல், அந்த ஆட்சியில் கேட்டீர்களா என்பதெல்லாம் பிரச்சனையை திசைதிருப்பும் நடவடிக்கை.

தவெக அணுகுமுறையில் மாற்றம் தேவை. பல விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிக்கிறார்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவது. ஜனநாயகபூர்வமான வாய்ப்பை உருவாக்குவதுதான் நல்ல அரசுக்கு அழகு. அத்தகைய அணுகுமுறை தவெக அரசிடம் இல்லை.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் உள்ள 3 கோப்புகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.