தில்லி சர்வதேச விமான நிலையத்தில் நீடிக்கும் தொழில்நுட்பக் கோளாறு 700-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு ; பயணிகள் கடும் அவதி
8 Nov 2025, 2:42 pm

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் நீடிக்கும் தொழில்நுட்பக் கோளாறு 700-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு ; பயணிகள் கடும் அவதி

புதுதில்லி தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் நாட்டின் மிக முக்கியமான விமான நிலையமாக, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் வியாழனன்று முதல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் (ஏடிசி) விட்டு, விட்டு தொடர்ச்சியாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5:45 மணியளவில் தானியங்கி செய்தி மாற்று (AMSS) அமைப்பிலும் கடுமையான தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தில்லி விமான நிலையம் கையேடு முறையில் (Manual Mode) செயல்பட வேண்டியிருந்தது. இதனால் விமான நிலையச் செயல்பாடுகள் மிகவும் தாமதமாகியது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட அனைத்து முக்கிய விமான நிறுவனங்களும் ஏடிசி சிஸ்டம் செயலிழந்ததால் தங்களது சேவைகளை நிறுத்தின. இதனால் வெள்ளியன்று சுமார் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த தொழில்நுட்பக் கோளாறு ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. அதாவது தானியங்கி செய்தி மாற்று அமைப்பு சிஸ்டம் மீட்டெடுக்கப்பட்ட போதிலும், சனியன்று மாலை நிலவரப்படி சுமார் 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. விட்டுவிட்டு சர்வர் பிரச்சனை இருப்பதால் சனியன்று புறப்பட்ட விமானங்கள் சராசரியாக 50 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதத்துடன் புறப்பட்டுச் சென்றன. அதே போல தில்லியை நோக்கி வரும் விமானங்களின் அட்டவணையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தில்லி விமான நிலையத்தின் பயணிகள் தொடர்ந்து 2 நாட்களாக பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.