ஸ்கேன் இந்தியா
24 Dec 2025, 3:39 pm

ஸ்கேன் இந்தியா

நிராகரிப்பு - 1

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. 35 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி பெற்றது. உள்ளாட்சித் தேர்தல்களில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்)யைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது பெரிய கட்சியாக வந்து விடுவோம் என்று பிரச்சாரம் செய்தனர். மூன்று கட்டத் தேர்வு முடிவுகளும் வந்துவிட்டன. மக்களவைத் தேர்தலில் 47 விழுக்காடு இடங்களை வென்றிருந்த பாஜக, வெறும் 5 விழுக்காடு ஊராட்சிகளில் மட்டுமே வென்றுள்ளது. முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் சுமார் 26 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. படுதோல்விக்கான காரணங்களைச் சொல்ல முடியாமல் அக்கட்சியினர் தவித்து வருகிறார்கள். தனித்துப் போட்டியிட்ட சிபிஐ(எம்), சிபிஐ ஆகிய இரண்டு கட்சிகளும் 166 ஊராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளன.

நிராகரிப்பு - 2

மகாராஷ்டிர மாநிலம் நான்தெத் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளனர். நாடு முழுவதும் வாரிசு அரசியலுக்கு எதிராகப் பேசிக் கொண்டே, வாரிசுகளை அதிகமாக அரசியலுக்குக் கொண்டு வரும் கட்சி என்ற பெயரும் எடுத்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டம் நிறைவு பெற்று முடிவுகள் வந்துள்ளன. பெரும்பாலும் ஆளுங்கட்சிதான் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெறும் என்பதுதான் மகாராஷ்டிராவில் வழக்கம். அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால் நான்தெத்தில் உள்ள லோஹா நகர்மன்றத்திற்கான தேர்தலில் கஜானன் சூர்யவன்ஷி என்பவர் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவரது துணைவியார், சகோதரர், அண்ணி, சகோதரியின் கணவர் மற்றும் ஒரு நெருக்கமான உறவினர் ஆகியோர் வேட்பாளர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரையும் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.

நிராகரிப்பு - 3

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜகவுக்கு படுதோல்வி கிடைத்திருக்கிறது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மொத்தம் 347 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 201 வார்டுகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் உள்ளன. விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள பாஜக, வெறும் நான்கு வார்டுகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இந்த நான்கு வார்டுகளும் பதான்கோட் என்ற ஒரேயொரு மாவட்டத்தில் இருந்து மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஒரு இடத்தில் கூட அக்கட்சி யால் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டார்கள் என்று பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர்களே புலம்புகிறார்கள்.

நிராகரிப்பு - 4

ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேர்ந்தவர்களுக்கு மத்தியக் காவல்துறைப் பிரிவுகளில் இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டது. பத்து விழுக்காடு வரையில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேலையில்லா இளைஞர்கள் மத்தியில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொரு ஆண்டும் நேபாள இளைஞர்களும் சேர்ந்து வந்தனர். இந்தத் திட்டத்திற்குப் பிறகு அங்குள்ள இளைஞர்கள் சேர்வதில்லை. இந்நிலையில்தான் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் பணிக்குப்பிறகு வீரர்கள் வெளியே வருகிறார்கள். திடீரென்று எல்லைப் பாதுகாப்புப் படையில் 50% விழுக்காடு இடஒதுக்கீடு என்று அறிவித்திருக்கிறார்கள். அப்படையில் சமூக வாரியான இட ஒதுக்கீடு உண்டு. பின்னர் எப்படி இதைத்தர முடியும் என்ற வினா எழுந்திருக்கிறது. இட ஒதுக்கீடையே நிராகரிக்க இப்படி ஒரு உத்தியாக இருக்கும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.