சென்னை விரைவு செய்திகள்
7 Dec 2025, 3:52 pm

பூண்டி கிராமத்தில் புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

ராணிப்பேட்டை, டிச.7- வாலாஜா தாலுகாவிற்குட்பட்ட பூண்டி கிராமத்தில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதை அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கதிர்வீச்சு காரணமாக உடல்நலத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் என அச்சம் தெரிவித்து புதிய டவர் கட்டுமானத்தை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1300 குடும்பங்கள், 2000-க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கும் பூண்டி கிராம மையப்பகுதியில் உள்ள பல்லத் தெருவில் சஞ்சீவி கவுண்டர் மகன் பாண்டியன் இடத்தில் செல்போன் டவர் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கெனவே நிறுவப்பட்ட செல்போன் டவர் கதிர்வீச்சு காரணமாக ஏராளமானோருக்கு கை கால் ஊனம், புற்றுநோய், குழந்தை இன்மை போன்ற நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், முதியவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் மற்றொரு டவர் அமைந்தால் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். மக்கள் நெருக்கடி நிறைந்த இடமாகவும், கால்நடை வளர்ப்பு வாழ்வாதாரமாகவும் கொண்ட இப்பகுதியில் கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்லத் தெருவில் அமைக்கப்படவுள்ள செல்போன் கோபுர கட்டுமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பழவேற்காட்டில் மர்ம பொருட்கள் கரை ஒதுங்கியது

திருவள்ளூர், டிச.7- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள அரங்கம்குப்பம் கடற்கரை பகுதியில் ஞாயிறன்று சில மர்ம பொருட்கள் கரை ஒதுங்கின. அது என்னவென்று தெரியாமல் மீனவர்கள் குழம்பிய நிலையில் திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இது கப்பலின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. டிட்வா புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஒரு வார காலமாக கடற்கரை ஓரங்களில் இதுவரை அறிந்திராத மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரும் நிலையில் ஞாயிறன்று மேலும் ஒரு பொருள் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகத் திருவிழா நீட்டிப்பு

திருப்பத்தூர், டிச.7- திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் புத்தக விற்பனை தொடர்ந்து 3 நாட்களுக்கு டிச.11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.சாந்தசெல்வல்லி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த புத்தக திருவிழா திங்கட்கிழமையுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் புத்தக விற்பனை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடரும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி பயனடையலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

விழுப்புரம், டிச.7- திண்டிவனம் அருகே தென்பசியார் என்ற இடத்தில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி கார் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியது. சாலை ஓர மரத்தின் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.