பள்ளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு
17 Feb 2026, 3:36 pm
<p><strong>பள்ளூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு</strong></p>
<p>ராணிப்பேட்டை, பிப்.17 – நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளூர் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஞாயிறன்று (பிப். 15) அங்கு புதிய பகுதி நேர நியாய விலைக் கடையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். பள்ளூர் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இது குறித்து நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலுவிடம் பொதுமக்கள் முறையிட்டனர். பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்த அவர், இக்கோரிக்கையை அமைச்சர் ஆர். காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கோரிக்கையை பரிசீலிக்க அமைச்சர், உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இப்பகுதியில் பகுதி நேர கடை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு ஞாயிறன்று (பிப். 15) திறப்பு விழா நடைபெற்றது. புதிய பகுதி நேர நியாய விலைக் கடையைத் திறந்து வைத்த அமைச்சர் ஆர். காந்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி பார்த்திபன், சேட்டு, மோகன், வேலாயுதம், திருநாவுக்கரசு உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
