உதகையில் ரோஜா கண்காட்சி துவங்கியது!
14 May 2026, 9:35 pm

உதகையில் ரோஜா கண்காட்சி துவங்கியது!

உதகை, மே 14 - நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி யுள்ள நிலையில், உதகை ரோஜா பூங்காவில் வியாழனன்று ரோஜா கண்காட்சி துவங்கியது.

40 ஆயிரம் செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் - உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலாத் தலங்களை ரசிக்கவும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

தேர்தல் சமயம் என்பதால், இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்பட வில்லை.

மேலும், காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி மட்டும் இந்த ஆண்டு நடத்தப் பட உள்ளது.

தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி க்கு நிகராக ரோஜா பூங்காவில் ரோஜா பூக்களை கொண்டு கண்காட்சி நடைபெறும்.

இந்த ஆண்டு ரோஜா கண்காட்சி வியாழ னன்று துவங்கியது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு, கண்காட்சி யைத் துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சி மே 18 வரை 5 நாட்கள் நடக்கிறது.

சுற்றுலாப் பயணி களை கவர்வதற்காக அன்னம், கழுகு உள்ளிட்ட பறவை வடிவங்களில் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைகளில் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளன.

தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மேலும், கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன், 2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது என்றனர்.