6 விடுதிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’
13 hours before

6 விடுதிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’

உதகை, செப்.8-உதகை நகராட்சியில் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, வணிகரீதியாக செயல்பட்டு வந்த 6 விடுதிகளுக்கு (காட்டேஜ்) நகராட்சிஅதிகாரிகள் சீல் வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை இடர்பாடுகளை களையவும் ‘மாஸ்டர் பிளான் சட்டம்’, மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன. செங்குத்தான மலைச்சரிவில் கட்டிடங்கள் கட்டக்கூடாது. குடியிருப்புக்கான அனுமதி வாங்கி கட்டப்படும் கட்டிடத்தை, வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடாது. வணிக கட்டிடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெறவேண்டும். 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், பலர் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டுகின்றனர். மேலும், சிலர் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று வணிகரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நகரமைப்பு அலுவலர்கள் மகேந்திரகுமார், ஸ்ரீதரன் ஆகியோர் திங்களன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஹாலிவுட் ஹில்ஸ் பகுதி, அதை ஒட்டிய பகுதிகளில் 6 கட்டிடங்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக விடுதிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.