உதகை – மேட்டுப்பாளையம் சாலை விரைவில் திறப்பு! நீலகிரி ஆட்சியர் பேட்டி
6 Nov 2026, 12:55 am

உதகை – மேட்டுப்பாளையம் சாலை விரைவில் திறப்பு! நீலகிரி ஆட்சியர் பேட்டி

உதகை, நவ.5-மழையால் பலத்த சேதமடைந்த உதகை – மேட்டுப்பாளையம் சாலை விரைவில் திறக்கப்படவுள்ளதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருதெரிவித்துள்ளார்.

கடந்த அக்.23 ஆம் தேதி நள்ளிரவு கொட்டிய கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரியில் பல இடங்களில் மரங்கள் விழுதல், மண்சரிவு ஏற்பட்டன. பர்லியார் பகுதியில் 250 மிமீ., மழை கொட்டி தீர்த்த நிலையில் குன்னூர் -மேட்டுபாளையம் சாலையில் பர்லியார் அருகே கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மழைநீருடன் அடித்து வரப்பட்ட மண், பாறைகள் மற்றும் மரங்கள் உருண்டு விழுந்ததில், ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தார். இந்த மண்சரிவால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத படி சாலை சேதமடைந்தது. எந்நேரத்திலும் விழும் நிலையில், சிறு சிறு பாறைகள் தொங்கியபடி இருந்ததால், அக்.24 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் கோத்தகிாி வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்டுவருகின்றன. பர்லியாரில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த பகுதியில் நிரந்தர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுவது தொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகசென்னை மண்டல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இமயமலை போன்ற கடினமான மலை பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சிறப்பு வல்லுநர்களை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மண்பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் பர்லியார் வரை மட்டும், அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கக்கூடாது என அரசு பேருந்து மற்றும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, மழை பெய்யும் போது மட்டும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.பர்லியாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதியில் சாலை அதிக சேதமடைந்துள்ளது. பர்லியாரை கடந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதி (கோயம்புத்தூர் எல்லைக்குட்பட்ட பகுதி) அதிக சேதமடைந்துள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ளதால், சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். விரைவாக சாலையை திறக்க தற்காலிகமாக எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர். தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொண்ட பின், 1 முதல் 2 வாரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் சாலை போக்குவரத்தை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.