மலர் கண்காட்சி நிறைவு: ராணுவ பயிற்சி கல்லூரிக்கு விருது
29 May 2026, 8:40 pm
<p><strong>மலர் கண்காட்சி நிறைவு: ராணுவ பயிற்சி கல்லூரிக்கு விருது</strong></p><p>கோடை சீசனையொட்டி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில் நீலகிரியில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுவரும் தனியார் பூங்காக்கள், அரசு ஓய்வு மாளிகை பூங்காக்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு 128 ஆவது மலர் கண்காட்சி கடந்த மே 18ஆம் தேதி துவங்கி, மே 28ஆம் தேதியன்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மலர்க் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வியாழனன்று நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் நவநீதா தலைமை வகித்தார். இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி ‘கார்டன் ஆஃப் தி இயர்’ முதலமைச்சர் சுழற்கோப்பையை குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியும், ப்ளூம் ஆஃப் தி ஷோ கவர்னர் கோப்பையை காஸ்மிக் ரேஸ் ஆய்வகமும் வென்றன. இதுதவிர சிறிய பூங்கா, புல்வெளி, கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை குடில்களில் வைத்திருந்ததற்கான சுழற்கோப்பைகள், வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 175 கோப்பைகள் வழங்கப்பட்டன.</p>
