மே 18 முதல் மலர் கண்காட்சி களைகட்டும் உதகை
15 May 2026, 11:10 pm

மே 18 முதல் மலர் கண்காட்சி களைகட்டும் உதகை

உதகமண்டலம், மே 15 - சர்வதேச அளவில் புகழ்பெற்ற நீலகிரி கோடை விழாவின் சிகர நிகழ்ச்சியான 128-ஆவது மலர் கண்காட்சி, வரும் மே 18-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வழக்கமாக மே மாத முதல் வாரத்தில் மலர் கண்காட்சி தொடங்கப்படும்.

இந்த ஆண்டு தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஆட்சி மாற்றக் காலக்கட்டமாக இருந்ததால், கண்காட்சி நடத்தப்படுவதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக, புதிய அரசின் அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, மே 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தொடக்க விழா தள்ளிப்போனது.

மேலும், தேர்தல் காரணமாக இந்த ஆண்டு கோடை விழாவின் ஒரு பகுதியான காய்கறி கண்காட்சியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128-ஆவது மலர் கண்காட்சி வரும் மே 18-ஆம் தேதி (திங்களன்று) தொடங்குகிறது.

மே 18 முதல் மே 28 வரை (10 நாட்கள்). நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார்.

கண்காட்சிக்காகப் பல லட்சம் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அலங்காரங்கள் மற்றும் மலர் உருவங்கள் அமைக்கும் பணிகள் பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவால், கோடை விடுமுறையைக் கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.