அனைத்து மதப் பழமைவாதிகளும் ஒன்றிணையும் புள்ளி! - அ.அன்வர் உசேன்
4 Nov 2026, 9:02 pm

அனைத்து மதப் பழமைவாதிகளும் ஒன்றிணையும் புள்ளி! - அ.அன்வர் உசேன்

சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும், அதானி என்.டி.டி.வியை கைப்பற்றுவதற்கு முன்பு அதில் பணியாற்றிய பிரபல ஊடகவியலாளருமான நிதி ரஸ்தானும் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். உமர் அப்துல்லாவின் முதல் மனைவியான பாயல் என்பவரும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்தான்! மேலும் உமர் அப்துல்லாவின் சகோதரியான சாரா அப்துல்லா, ராஜேஷ் பைலட்டின் மகனும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

எனவே உமர் அப்துல்லா குடும்பத்தில் மாற்று மதத் திருமணம் புதிதல்ல. எனினும், இந்தத் திருமணத்தை இந்துத்துவவாதிகள் கடுமையாக இழிவுபடுத்தி விமர்சித்தனர். இப்பொழுது சில இஸ்லாமியப் பழமைவாதிகளும் தம் பங்குக்கு விமர்சித்து வருகின்றனர்.

இஸ்லாமியப் பழமைவாதியின் தேவையற்ற கூற்று

அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, இந்தத் திருமணத்தை இஸ்லாமியச் சட்டத்தின்படி செல்லாது என்றும், உமர் அப்துல்லா நிதி ரஸ்தானை திருமணம் செய்வதற்கு முன்பாக அவரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மதமாற்றுத் திருமணப் பிரச்சனையில் பெரும்பான்மை மதவாதிகளும் சிறுபான்மைப் பழமைவாதிகளும் ஒரே புள்ளியில் இணைகின்றனர்.உமர் அப்துல்லா தனது திருமணத்தை இஸ்லாமிய முறையில் அங்கீகரிக்குமாறு கேட்கவில்லை. அவர்களது திருமணம் ‘சிறப்புத் திருமணச் சட்டம்’ (Special Marriage Act) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மதச்சார்பின்மை அடிப்படையிலான திருமணச் சட்டம் ஆகும். இச்சட்டம் 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒன்றாகும். மாற்று மதத்தவர்கள் மதமாற்றம் இன்றி திருமணம் செய்துகொள்ள இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதேபோலத் தமிழ்நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்வதற்கும், ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் சடங்குகள் இல்லாத திருமணத்திற்கும் ‘சுயமரி யாதைத் திருமணம்’ வழிகோலுகிறது. எனவே உமர் அப்துல்லா தனது திருமணத்தை இஸ்லாம் முறைப்படி அங்கீகரிக்கக் கேட்காத பொழுது, ஜமாத் தலைவருக்கு அதனை விமர்சிக்க வேண்டிய முகாந்திரம் எங்கே உள்ளது?

மேலும் காஷ்மீரில் உள்ள இஸ்லாம், சூஃபி பிரிவைப் பின்பற்றுவதாகும். பெரும்பா லோர் “காஷ்மீரியத்” எனும் கோட்பாட்டைப் பின்பற்று கின்றனர். இது அனைத்து மதங்களையும் அரவணைக்கும் தன்மையுடையது. சமீப காலங்களில் மத அடிப்படைவாதம் மேலோங்கி யிருந்தாலும், பெரும்பாலான மக்கள் காஷ்மீரியத் எனும் பண்பாட்டைப் பின்பற்றுகின்றனர். எனவே உமர் அப்துல்லாவின் மாற்றுமதத் திருமணம் ஆச்சரியமான ஒன்றல்ல.

பிரபல மாற்று மதத் திருமணங்கள்

மாற்றுமதத் திருமணத்தைப் பெரும்பான்மை மதவாதிகளும் சிறுபான்மை மதப் பழமைவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளும் ஏற்பதில்லை. ஆனால் இடைக்காலத்தில் அரச குடும்பத்தினர் மாற்றுமதத் திருமணம் செய்துகொள்வது பரவலாக நடந்துள்ளது. அக்பர் ராஜபுத்திரப் பெண்களை மணந்துகொண்டார். ஜஹாங்கீரின் முதல் மனைவி இந்து ஆவார். இவர்களது திருமணம் இந்து முறைப்படியும் நடந்தது; இஸ்லாமிய முறைப்படியும் நடந்தது.

தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜஹானின் தாய் ஒரு இந்து. பெரோஸ் ஷா எனும் இஸ்லாமிய மன்னரின் தாயும் இந்துவே ஆவார். வைணவத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட கிருஷ்ணதேவராயர் தனது மகளை ஒரு இஸ்லாமிய இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணங்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும், இத்தகைய திருமணங்கள் பரவலாக நடந்துள்ளன.

சமீப காலங்களில் சுனில் தத் – நர்கீஸ், நசீருதீன் ஷா – ரத்னா பதக், ஷாருக்கான் – கௌரி, சைஃப் அலி கான் – கரீனா கபூர், சுனில் ஷெட்டி – மனா ஷெட்டி, மனோஜ் பாஜ்பாய் – ஷபானா ரசா, சோனாக்சி சின்ஹா – ஜாகீர் இக்பால், முகமது அசாருதீன் – சங்கீதா பிஜ்லானி ஆகியோரும் மாற்று மதத் திருமணம் செய்துகொண்டனர். அதேபோல சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுஹாசினி, முன்னாள் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சல்மான் ஹைதரின் மகனான நதீம் ஹைதரைத் திருமணம் செய்துகொண்டார்.

இடைக்கால அரச குடும்பத் திருமணங்களும் சரி, இன்றைய மேற்கண்ட தம்பதிகளும் சரி, தங்களின் மத அடையாளங்களை மாற்றிக்கொள்ளாமல் பரஸ்பர மரியாதையுடன் வாழ்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இவை சிறந்த உதாரணங்கள் ஆகும். எளிய மக்களிடையேயும் கணிசமான முறையில் இத்தகைய திருமணங்கள் அல்லது காதல்கள் நடக்கின்றன.

மாற்று மதத் திருமணங்கள் தடுப்பு

எனினும் இத்தகைய திருமணங்களைத் தடுக்க வேண்டும் எனும் கங்கணத்துடன் சங் பரிவாரத்தினர் செயல்படுகின்றனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவற்றைத் தடுப்பதற்குப் பல சட்ட வழிவகைகளை உருவாக்கியுள்ளனர். மேலும் சில இந்துத்துவ அமைப்புகள், பதிவுத்துறை அலுவலகத்திற்கு வரும் மாற்று மதத் திருமண இணையர்களை வன்முறை மூலம் பிரிக்கின்றனர். இதற்கான தகவல்கள் பதிவுத்துறையிலிருந்தே செல்கிறது எனும் குற்றச்சாட்டுகளும் உண்டு.

பெரும்பான்மை மதவாதத்தின் மூர்க்கத்த னமான தாக்குதலும், அதன் எதிர்வினையாக உருவாகும் சிறுபான்மை மதவாதமும் தமது மதத்தவரின் சிந்தனை மற்றும் செயல்களை மத அடிப்படையில் கெட்டிப்படுத்தும்போது, அதன் முதல் பலிகளில் ஒன்று மாற்று மதத் திருமணம் அல்லது காதல் ஆகும்.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனது இணையரைத் தேர்வு செய்யும் உரிமை சுதந்திரமாக இருக்க வேண்டும். மதவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அதேவேளையில் உமர் அப்துல்லா – நிதி ரஸ்தான் திருமணம் என்பது அவர்களது தனிப்பட்ட விஷயம். எவருக்கும் அதில் மூக்கை நுழைக்க உரிமை இல்லை.