கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் விடிய விடிய போராட்டம்
19 Dec 2025, 5:32 pm
<p><strong>கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் விடிய விடிய போராட்டம்</strong></p>
<p>செங்கல்பட்டு, டிச. 19 - பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய தொகுப்பூதிய செவிலியர்கள் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, வியாழனன்று மாலை கைது செய்த காவல்துறையினர் பேருந்து மூலம் அவர்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே கோரிக்கைகளை வலியுறுத்தியும் காவல்துறையைக் கண்டித்தும் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் மீண்டும் வெள்ளியன்று (டிச.19) விடியற்காலையில் கைது செய்து, ஊரப்பாக்கம் அருகே தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கும், செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். கண்டனம் செவிலியர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக முறையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தும் செவிலியர்களை காவல்துறை கைது செய்துள்ளதை தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத் துறை சங்கங்களின் கூட்டமைப்பும் கண்டித்துள்ளது. செவிலியர்களை மீண்டும் அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.</p>
