உருக்குலைந்த இந்திய கல்வித் துறை: சித்ரவதை முகமையான தேர்வு முகமை - ஜி.செல்வா
5 Jun 2026, 7:58 pm

ஒன்றிய பாஜக அரசின் மத்திய கல்வி அமைச்ச கத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி சுயநிதி அமைப்பு தேசிய தேர்வு முகமை (என்டிஏ). இந்த அமைப்பு மருத்துவ கல்விக் கான நீட் தேர்வைத் தவிர, கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), தேசிய தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளையும் நடத்து கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் என்டிஏ நடத்திய தேர்வுகளில் 89 முறை வினாத்தாள் கசிவு ஏற் பட்டுள்ளது, பல்வேறு குறைபாடுகள் காரணமாக 48 முறை மறுதேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. இது தேசிய தேர்வு முகமையின் தோல்வியை அப்பட்ட மாக வெளிப்படுத்துகிறது.

நாட்டையே அதிரவைத்த நீட் மோசடி

இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 800 மருத்துவக் கல்லூரிகளின் 1.3 லட்சம் இடங்களுக்காக கடந்த மே 3ஆம் தேதி சுமார் 23 லட்சம் மாண வர்கள் நீட் தேர்வை எழுதினர். வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளால் மே 12 அன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 21ஆம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளுக்கு முன்பே நீட் வினாத்தாள் சுமார் 5 லட்சம் ரூபாய் அளவிற்கு காசு கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

பன்னிரண்டாம் வகுப்பு இறுதி மதிப்பெண் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு உகந்தது அல்ல, நீட் தேர்வில் பெறும் மதிப்பின் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்பிற்கு சேர முடியும் என்கிற சூழலை ஒன்றிய ஆட்சியாளர்கள் கொண்டு வந்து விட்டனர். இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் தூக்கம், உணவை மறந்து உடலை வருத்திப் படித்த மாணவர்கள், தேர்வு மோசடியால் உருக்குலைந்து போகின்றனர். அவர்தம் பெற்றோர் துயரத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்ற னர். நாட்டின் பல பாகங்களில் மாணவர் தற்கொலை கள் செய்தியாகக் கடத்தப்படுகிறது.

பள்ளிக்கல்வியை தோல்விக்கு உள்ளாக்கிய பாஜக

ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வித்துறை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் திருத்தம், அரசின் அலட்சியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது. சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய விடைத்தாளை ஆசிரியர்கள் நேரடியாக திருத்தும் முறையை இந்த ஆண்டு மாற்றி உள்ளனர். புதிய முறைப்படி, விடைத்தாள் கணிப்பொறியில் ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும் ஆசிரி யர் திருத்தம் செய்து மதிப்பீடு அளிப்பார். இந்த முறை ஓஎஸ்எம் (கணினித் திரை மதிப்பீட்டு முறை) என அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விடத் தேர்ச்சி விகிதம் 88.39 சதவீதத்திலிருந்து 85.29 சதவீதமாகக் குறைந்துள்ளது.

புதிய முறையில் விடைத்தாளைத் திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க மத்திய கல்வி இயக்ககம் (சிபிஎஸ்இ) தவறிவிட்டது. பன்னி ரண்டாம் வகுப்பு தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே புதிய முறையில் திருத்துவதற்கான பயிற்சிக்கு ஆசிரியர்களுக்கு அவசர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேகமாகவும் குறைகள் இன்றியும் இருக்கும் என சிபிஎஸ்இ பிப்ரவரி 9 சுற்றறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் எல்லாவிதமான குளறுபடிகளும் அரங்கே றின. 17 லட்சம் மாணவர்களின் 40 கோடி பக்க விடைத் தாள்கள் ஸ்கேனிங் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் விடைத்தாள்கள் படிப்பதற்கு உகந்த வகையில் உள்ளதா என்றும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய திறன் மனித வளத்திற்கு உள்ளதா என்றும் சரிபார்க்கப்படவில்லை.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், சிங்கப்பூர், ஆஸ்தி ரேலியா என உலகத்தின் சில பகுதிகளில் மட்டும் ஓஎஸ்எம் முறை நடைமுறையில் உள்ளது. அதுவும் எண்ணிக்கை அளவில் தேர்வு மையங்கள், மாணவர்கள் மிகவும் குறைவு. மேலும் அதிநவீன உள் கட்டமைப்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் சிபிஎஸ்இ கீழ் இயங்கும் சுமார் 33 ஆயிரம் பள்ளிக ளில் அத்தகைய நவீன தொழில்நுட்ப இணைய வசதியோ, ஆசிரியர் பயிற்சியோ அளிக்கப்படவில்லை.

மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்காக தெலுங்கானா மாநிலத்தின் கோயெம்ப்ட் எஜுடெக் நிறுவனத்துடன் 2025 மே மாதம் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக, 2025 ஆகஸ்ட் ஒப்பந்தத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த மோசடியை 12 ஆம் வகுப்பு மாணவரான சார்த்தக் சித்தாந்த் ஆதாரப்பூர்வமாக வெளிப் படுத்தியுள்ளார்:

“அந்த நிறுவனத்திற்கு நிதி தகுதி அளவுகோல்க ளைக் குறைத்தார்கள். மென்பொருள் பாதுகாப்புச் சான்றிதழ் தேவைகளை நீக்கினர். ஊழல் நடவடிக்கை களுக்கான தடை காலத்தைப் பாதியாகக் குறைத்த னர். உட்புற சேவையகங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய நிபந்தனையை அகற்றி னர். டெண்டருக்கு முன்பே, கடைசி நேர திருத்த அறிவிப்பு மூலம் ‘கருப்புப் பட்டியலிடல்’ என்ற சொல்லை நீக்கினர். மேலும், கட்டாயமாக மேற்கொள் ளப்பட வேண்டிய செர்ட்-இன் (CERT-In) பாது காப்புத் தணிக்கைகளையும் புறக்கணித்தனர்” என அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

மறு மதிப்பீட்டு இணையதளத்தில் எவர் ஒருவரும் எவருடைய விடைத்தாள்களையும் விண்ணப்பக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்ய முடிகிறது என்கிற அதிர்ச்சியை 19 வயது இளைஞர் வெளிப் படுத்தியுள்ளார். ஒன்றிய பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் தரவுப் பாதுகாப்பையும், தேர்வு மதிப்பெண்களையும், மனநலத்தையும் சூதாட்டப் பொருளாக மாற்றி விட்டார்கள் என ஆவேசத்துடன் பதிவு செய்துள்ளார் மாணவர் சார்த்தக் சித்தாந்த்.

தொடரும் குளறுபடிகள்

2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) நாடு முழு வதும் என்டிஏ மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மே 30ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் சில மையங்க ளில் கணிப்பொறி தொழில்நுட்பக் கோளாறு காரண மாக சுமார் 3,700 மாணவர்கள் திடீரெனத் தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வேறொரு தேதியில் தேர்வு நடத்தப் போவதாக என்டிஏ அறிவித்துள்ளது.

செய்ய வேண்டியது என்ன?

கல்வி உரிமைக்காக முற்போக்கு இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் வாயிலாக கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை யை வைத்து கல்லா கட்ட கார்ப்பரேட் முதலாளி கள் உலகெங்கும் திட்டம் தீட்டுகின்றனர். கல்வி வியாபாரமயமாக்கலின் தொடர்ச்சியாக, உயர்கல்வியை எட்டும் மாணவர்களின் வேட்கையை நுழைவுத் தேர்வு என்னும் இயந்திரத்தின் மூலம் வணிகமயமாக்கும் போக்கை கட்டமைத்து விட்டனர். கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சியாளர்கள் தேசியத் தேர்வு முகமையை இயக்கி வருகின்றனர்.

நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நடத்துவது ரூ.60,000 கோடி மதிப்புள்ள தொழில்துறை யாக மாறி உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இது ரூ.1.5 லட்சம் கோடி வருமானம் ஈட்டும் துறையாக மாறும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மையப்படுத் தப்பட்ட பாடத்திட்டங்களும் தேர்வுகளும் மாநிலக் கல்வி வாரியங்களை ஓரங்கட்டி, அவற்றின் சுயாட்சி யைக் குறைக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் என்டிஏ தேர்வுகள் அதன் தோல்வியை அப்பட்டமாக வெளிப்படுத்தி யுள்ளன. நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இதி லிருந்து எவ்வித படிப்பினையும் கற்றுக் கொள்ளாமல் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் வியாபாரிகளும் கட்டமைக்கும் கருத்தியலில் பொதுச் சமூகம் சுருண்டு கிடக்கிறது.

ஒரு பக்கம் வணிகமயமாக்கல், மறுபக்கம் குற்ற வியல் சக்திகளின் ஊடுருவல். வினாத்தாள் கசிவு என்பது மாபியா கும்பலின் ஒரு தொழிலாக மாறி உள்ளது. இது பரந்துபட்ட தொடர்புகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க் மூலமாக இயங்கி வருகிறது.

எனவே,

l உடனடியாக ஒன்றிய அரசின் தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்.

l நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும்.

l உயர் கல்வி சேர்க்கைக்கான விதிமுறைகளை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும்.

தேசிய அளவிலான கல்வி நிலையங்களில் மாண வர் சேர்க்கைக்கான வழிவகைகள் மாநில அரசுகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களின் ஆலோசனை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். கட்டுரையாளர் : மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)